Published : 10 Jun 2014 05:32 PM
Last Updated : 10 Jun 2014 05:32 PM

தமிழகத்தின் மின் நிலைமை: அமைச்சர் நத்தம் விசுவநாதன் விளக்கம்

தமிழகத்தில் உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அறவே நீக்கப்பட்டுள்ளன என்பதும், மின் தடை எதுவும் தொடர்ந்து அமல்படுத்தப்படவில்லை என்பதும்தான் உண்மை நிலை என்று மின் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

அதேவேளையில், பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டும், குறைந்த மின் அழுத்தமும் நிலவி வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டுப்பாடுகள் குறித்து அவர் எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

>மின்வெட்டு பிரச்சினையில் முதல்வர் வாக்குறுதி காற்றில் பறந்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் இன்று வெளியிட்ட அறிக்கை:

"தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்ற பழமொழிக்கேற்ப, தான் அமைத்த சமுதாயக் கூட்டணியை புறக்கணித்து, தன் கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களை புறந்தள்ளிவிட்டு, தன் மகனை மக்களவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக அல்லும்

பகலும் அயராது உழைத்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் "பச்சை தன்னலவாதி" டாக்டர் ராமதாஸ், திடீரென்று பொதுநலப் பிரச்சனையான மின்சாரம் குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தனது அறிக்கை மூலம் வெளியிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல், அதலபாதாளத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தும் வகையிலும், இருளில் மூழ்கியிருந்த தமிழகத்தை ஒளிமயமாக ஆக்கும் வண்ணம் மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையேயான 4,000 மெகாவாட் பற்றாக்குறையினை நீக்கும் வகையிலும் அல்லும், பகலும் அரும்பாடுபட்டதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் இதுகுறித்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, போர்க்கால அடிப்படையில் 2,500 மெகாவாட் மின்திறன் கொண்ட திட்டங்களை மூன்றே ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத பகீரத முயற்சியின் காரணமாக, இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைப் புரிந்து கொள்ளாமல், அரசியல் ஆதாயத்திற்காக மனம் போன போக்கில் அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது குறித்த உண்மை நிலையை எடுத்துரைப்பது எனது கடமை என்று கருதுகிறேன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக 2011-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது தமிழகத்தில் கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவி வந்தது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மின்சார உற்பத்தித் திட்டங்களை முனைப்பாக செயல்படுத்த எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எந்தவித அக்கறையும் காட்டப்படவில்லை. குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலையில் மின்சாரத்தை வாங்கி மின்சார வாரியத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டது.

குறிப்பாக, மின்சாரத்தை 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான நடுத்தர கால கொள்முதல் மூலமும், 15 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால கொள்முதல் மூலமும் மேற்கொள்வதற்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மேலும், திறமையற்ற நிதி மேலாண்மை காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலையை அதல பாதாளத்திற்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு தள்ளிவிட்டுச் சென்று விட்டது. இத்தகைய மோசமான சூழலில் தான் மின்சார

உற்பத்தி, கொள்முதல் மற்றும் விநியோகத்தை சீர் செய்யும் மாபெரும் சவாலை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எதிர்கொண்டு, போர்க்கால அடிப்படையில் அதில் வெற்றி அடைந்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 2001-2006-ஆம் ஆண்டைய ஆட்சிக் காலத்தில் 12.07.2002 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சென்னை அருகில் வல்லூரில் அமைந்துள்ள தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி திட்டத்தின் முதல் அலகு (500 மெகாவாட்) 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், இரண்டாம் அலகு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலும் வணிக ரீதியாக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இவ்விரண்டு அலகுகளிலிருந்து தமிழகத்தின் பங்கு 700 மெகாவாட் ஆகும். மேட்டூர் நிலை மூன்று (ஸ்டேஜ் 3) அனல் மின் உற்பத்தி நிலையம் (600 மெகாவாட்) 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வணிக ரீதியான மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. வடசென்னை இரண்டாம் நிலை அனல் மின் உற்பத்தி திட்டத்தின் முதல் அலகு (600 மெகாவாட்) 2014 மார்ச் மாதத்திலும், இரண்டாம் அலகு (600 மெகாவாட்) 2014-ஆம் ஆண்டு மே மாதத்திலும் வணிக ரீதியாக உற்பத்தியை தொடங்கி உள்ளன.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போட்டிருந்த மேற்காணும் அனல் மின் உற்பத்தி திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலலிதா முடுக்கிவிட்டதன் காரணமாக 5 புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் உற்பத்தியை தொடங்கி 2500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவு திறன் உருவாக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது, நடுத்தர கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 500 மெகாவாட் மின்சாரம் 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாங்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, 1000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து 562 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வருகிறது.

இது தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 3330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய 15 ஆண்டுகளுக்கு நீண்டகால ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் தற்போது 222 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இது படிப்படியாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2000 மெகாவாட் ஆக உயரும். மீதமுள்ள 1330 மெகாவாட் மின்சாரம் வரும் 2015-16-ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 2 X 250 மெகாவாட் விரிவாக்கத் திட்டம் மூலம் 230 மெகாவாட் மின்சாரம், தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில், 19.06.2003 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் 2 X 500 மெகாவாட் மின் திட்டத்திலிருந்து கிடைக்கக்கூடிய 387 மெகாவாட் மின்சாரம், 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூரில் உள்ள தேசிய அனல் மின் கழக கூட்டு முயற்சித் திட்டத்தின் மூன்றாவது அலகு மூலம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிடைக்கும் 350 மெகாவாட் மின்சாரம், 1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாம் அலகிலிருந்து இந்த ஆண்டு இறுதியில் கிடைக்கக்கூடிய 462 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 1,429 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் நடப்பு ஆண்டிலேயே கூடுதலாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்கும். இது மட்டுமல்லாமல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் 2,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்.

எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை நிறுவுவதற்கு முதல்வர் ஜெயலலிதா மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறார். இதன் அடிப்படையில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கம் 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ ஒப்பந்த ஆணை 27.02.2014 அன்று முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், X ஓ 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்டம் மற்றும் 2 X 600 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி மிக உய்ய மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அவற்றிற்கான பணி ஆணைகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.

இது தவிர, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 1600 மெகாவாட் (2 ஒ 800 மெகாவாட்) திறன் கொண்ட மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடசென்னை மூன்றாம் நிலை மின் திட்டம் (1 X 800 மெகாவாட்), எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் (1 ஒ 660 மெகாவாட்) , உடன்குடி அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (2 ஒ 660 மெகாவாட்), தூத்துக்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கான மாற்று திட்டம் (2 ஒ 660 மெகாவாட்) ஆகியவற்றுக்கானத் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், தமிழகத்தில் உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அறவே நீக்கப்பட்டுள்ளன என்பதும், மின் தடை எதுவும் தொடர்ந்து அமல்படுத்தப்படவில்லை என்பதும்தான் உண்மை நிலை.

தமிழக முதல் அமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கு ஏற்ப டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதியில் 8,000 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, கடந்த மூன்று ஆண்டு காலத்தில், அதாவது 16.5.2014 நிலவரப்படி, 12,995 மெகாவாட் என்ற உச்ச அளவு மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, கூடுதலாக 5000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவப்பட்டுள்ள 2500 மெகாவாட் மின்நிறுவு திறன், நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கின்ற 500 மெகாவாட் மின்சாரம், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கின்ற மற்றும் கிடைக்கக்கூடிய 3330 மெகாவாட் மின்சாரம், இந்த ஆண்டில் நிறுவப்பட உள்ள 2,000 மெகாவாட் மின் நிறுவு திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டால், இந்த ஆண்டு 2014-15 நிதியாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் 14,500 மெகாவாட் மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிச்சயம் நிறைவேற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்காணும் விளக்கத்திலிருந்து, மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே தரக்கூடிய காற்றாலை மின்சாரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆண்டு முழுவதும் கிடைக்கும் அனல் மின் சக்தியைக் கொண்டே தமிழகத்தின் மின் தேவை முழுமையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும், அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதையே வழக்கமாக, வாடிக்கையாக கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவை அடைவதற்காக எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான, முனைப்பான நடவடிக்கைகள் குறித்து குறை கூறுவது நகைப்புக்குரியது, கேலிக்கூத்தானது, எள்ளிநகையாடத்தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x