Published : 03 Jul 2022 08:28 PM
Last Updated : 03 Jul 2022 08:28 PM
காரைக்கால்: காரைக்காலில் காலரா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் காலரா பரவல் சூழல் உருவாகியுள்ள நிலையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூலை 3) மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா, மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வி.சத்தியமூர்த்தி மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் காரைக்காலில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியது: ''அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 15 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு, நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கல்வி நிறுவனங்களில் உள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நாளை முதல் தொடங்கும்'' என்றார்.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: இந்நிலையில் காலரா பரவல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 4) முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT