Published : 03 Jul 2022 04:57 PM
Last Updated : 03 Jul 2022 04:57 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக உள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''குடியரசுத் தலைவர் என்பவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது. பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகளுக்கு எப்படி தனி அதிகாரம் உள்ளதோ, அதேபோல் குடியரசுத் தலைவருக்கும் உள்ளது. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுபவராக குடியரசுத் தலைவர் இருக்கக் கூடாது.
அவர் முடிவு எடுக்கும்போது இந்திய அரசிலமைப்பு சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும். தற்போதுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மோடி அரசு அனுப்பும் கோப்புகள் அனைத்துக்கும் தடையில்லாமல் கையெழுத்திடுகிறார். இது குடியரசுத் தலைவரின் வேலை இல்லை. குடியரசுத் தலைவர் என்பவர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். திரவுபதி முர்மு மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளது.
ஆனால், யஷ்வந்த் சின்ஹா ஐஏஎஸ் படித்தவர், சிறந்த நிர்வாகி, நிதித்துறை, வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவ்விரு வேட்பாளர்களையும் ஒப்பிட்டு பார்த்து மனசாட்சியின் அடிப்படையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர் இருப்பதாகவே தெரியவில்லை. அந்த நிலை இருக்கக் கூடாது. குடியரசுத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தை செலுத்த வேண்டும்.
அதை யஷ்வந்த் சின்ஹா செய்வார் என்று நம்பிக்கை உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. புதுச்சேரிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1,300 கோடி கிடைக்கும்.
5 ஆண்டு முடிந்த பிறகு இந்த இழப்பீடு தொகை வராது. இதனால் பட்ஜெட்டில் துண்டு விழும். மாநில அரசின் பட்ஜெட்டில் ரூ.1,300 கோடியை குறைக்க வேண்டி இருக்கும். கட்டுமான பணிகள் தடைபடும். பல துறைகளுக்கு கொடுக்கப்படும் நிதி குறைக்கப்படும். முறையான பட்ஜெட் போட முடியாது. மாநில வளர்ச்சி குறையும். எனவே தான் பல மாநிலங்கள் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு கொடுங்கள். நாங்களே வரி போட்டுக் கொள்கிறோம் என்று போர்க்கொடி தூக்குகிறார்கள். நாட்டில் ஜிஎஸ்டியை கொண்டுவந்ததன் மூலம் தொழில் நிறுவனங்களும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி என்பது மோடி அரசின் மிகப்பெரிய தோல்வி திட்டமாகும்.
காரைக்காலில் மிகப்பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடிநீர் கழிவுநீர் கலந்து, அதனை குடித்ததால் கோட்டுச்சேரி, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் வாந்தி பேதி ஏற்பட்டு காலரா அறிகுறி வந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இந்த புகார் வந்தபோது, அதனை ஒரு பொருட்டாக அரசு எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் 800 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு காலரா வரும் நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்காலில் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஒரு பிரகடனத்தை அறிவித்துள்ளார். இது புதுச்சேரி நிர்வாகம் சீரழிந்துள்ளது என்பதை காட்டுகிறது. முதல்வர் தான் சுகாதாரத்துறையின் அமைச்சராக உள்ளார். அவர் ஒரு முறை கூட காரைக்காலுக்கு செல்லவில்லை.
மருத்துவ துறை மீது முதல்வர் கவனம் செலுத்ததால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பட்ட குடிநீர் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இத்துறைகள் மெத்தமான செயல்படுவதற்கு காரணம் முதல்வரும், அமைச்சர்களும் ஒற்றுமையாக செயல்படதாததுதான். காரைக்கால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான காலத்தில் சுகாதார நெருக்கடி என்று பிரகடனும் செய்யும் நிலை காரைக்காலுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஜிஎஸ்டி நிதி ரூ.1,300 கோடி வரவில்லை என்றால் முதல்வர் ரங்கசாமி அடுத்ததாக பொருளாதார நெருக்கடியை பிரகடனப்படுத்துவார். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியாது. வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது. மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற முடிவில்லை. பிரதமர் மோடி தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதி ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையை சீர் செய்ய வேண்டும். காரைக்கால் மீது முதல்வரும், அமைச்சர்களும் கவனம் செலுத்த வேண்டும்.'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT