Published : 03 Jul 2022 04:49 PM
Last Updated : 03 Jul 2022 04:49 PM
வத்தலகுண்டு: வத்தலகுண்டு நகரில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் ஆர்.விசுவநாதனை நீக்குவதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைதிகாத்த தொண்டர்கள் மத்தியில் தற்போது சலசலப்பு தொடங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு என அதிமுக கட்சி நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் உள்ளார். கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வத்தலகுண்டு நகரில் நேற்று திடீரென ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
போஸ்டரில், 'எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் கைகாட்டிய மக்கள்நாயகன் ஓ.பி.எஸ்., க்கு ஆதரவாக வத்தலகுண்டு மக்கள். எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விசுவநாதன், கே.பி.முனியசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள், ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள்,'' என உள்ளது.
இதுகுறித்து போஸ்டர் ஒட்டிய எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய நிர்வாகி செல்லத்துரை கூறுகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இன்றளவும் செயல்பட்டு வருகிறார். அவரை கட்சியை விட்டு நீக்கம் எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். அதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்து போஸ்டர் ஒட்டி அவர்களுக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம், என்றார்.
ஜூலை 11 ல் அதிமுக பொதுக்குழு நடத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோரை தவிர மாவட்டத்தில் உள்ள மற்ற நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் அமைதிகாத்து வந்தனர்.
தற்போது வத்தலகுண்டு பகுதியில் முதன்முறையாக ஒட்டப்பட்ட ஓ.பி.எஸ்., ஆதரவு போஸ்டர் மூலம் அமைதியாக இருந்த திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் சலசலப்பு தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மாவட்ட செயலாளராக உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ்., ஆதரவு நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து அமைதி காத்துவருகின்றனர். இவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வர் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT