Published : 03 Jul 2022 01:54 PM
Last Updated : 03 Jul 2022 01:54 PM
சென்னை: சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு, மருத்துவமனையில் நிலைய மருத்துவ அலுவலர் (RMO) கடிதம் எழுதியுள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய அரசு பொது மருத்துவமனையாக ராஜீவ்காந்த அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் சென்னை தவிர்த்த பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தின் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. சமையல் அறையில் உள்ள சாப்பாத்தி கல்லு ,சமையல் அடுப்புகள் பழுதடைந்துள்ளன. இதனால், அங்கு பணிபுரியும் பெண்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு வரும் தண்ணீர் சுகாதரமில்லாமல் மஞ்சள் நிறத்தில் வருவதாகவும், குடிநீர் தொட்டி சுத்தம் செய்து பல மாதங்களாகி விட்டதாகவும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதுதொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் குப்பைகளும் உணவு கழிவுகளும் நிறைந்த அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனையின் RMO ( நிலைய மருத்துவ அலுவலர்) சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருகிறது. புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் குப்பைகளும், உணவு கழிவுகளும் தென்பட்டுள்ளது. உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து சுத்தம் சுகாதாரத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT