Published : 03 Jul 2022 09:15 AM
Last Updated : 03 Jul 2022 09:15 AM
மயிலாடுதுறை அருகே ஓய்வுபெற்ற நூலகர் ஒருவர் தன் மகன் திருமணத்துக்கு உறவினர்கள் செய்த மொய்ப் பணத்தை மாற்றுத்திறனாளி, முதியோர் காப்பகங்களுக்கு நேற்று வழங்கினார்.
மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூர் தென்னைமரச் சாலையில் வசிப்பவர் ஜெயக்குமார்(62). ஓய்வுபெற்ற நூலகர். இவரது மகன் சம்பத் குமாருக்கும், காந்திமதி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி மயிலாடுதுறையில் திருமணம் நடைபெற்றது. திருமண அழைப்பிதழிலேயே அன்பளிப்பை தவிர்க்கும்படி ஜெயக்குமார் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனாலும், அன்பின் காரணமாக மொய் செய்தவர்களிடம் மறுக்க முடியாததால், திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து, மொய்ப் பணத்தை அந்த உண்டியலில் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். பின்னர், இதில் வசூலான மொய்ப் பணம் ரூ.83 ஆயிரத்துடன், தன் பங்கையும் சேர்த்து ரூ.1 லட்சத்தை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் ஏழை முதியவர்களுக்கு ஜெயக்குமார் நேற்று பிரித்து வழங்கினார்.
மகனின் திருமணத்துக்காக பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்காத நூலகர் ஜெயக்குமார், மொய்ப் பணமாக வந்த தொகையையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கியுள்ளதை பலரும் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT