Published : 03 Jul 2022 06:04 AM
Last Updated : 03 Jul 2022 06:04 AM
திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவின் ஆசிரமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மழலையர் பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.35 கோடி மதிப்புள்ள 7.5 ஏக்கர் அரசு நிலம் நேற்று மீட்கப்பட்டது.
சென்னைக்கு அருகே உள்ள கேளம்பாக்கத்தில் பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான ராமராஜ்யம் என்ற ஆசிரமம் மற்றும் சுசில்ஹரி பள்ளி ஆகியவை உள்ளன. அவர் மீதான பாலியல் புகாரால் போக்சோ உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீன் பெற்று கேளம்பாக்கம் ஆசிரம வளாகத்தில் சிவசங்கர் பாபா தங்கி உள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்நிலையில் இந்த ஆசிரம வளாகத்தில் உள்ள மழலையர் பள்ளி அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் என்றும் ராமராஜ்யம் ஆசிரமம் அமைந்துள்ள இடம் ஏரிக்கரை என்றும் அதனை மீட்க வேண்டும் எனவும் கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து பள்ளி மற்றும் ஆசிரம நிர்வாகத்துக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் மழலையர் பள்ளி அமைந்துள்ள இடம் சாத்தங்குப்பம் கிராமத்தில் புல எண் 292-ல் அடங்கிய அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு இடம் என்றும் 7 ஏக்கர் 49 சென்ட் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இடத்தை மீட்க மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த இடத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கேட்டு ஆசிரமம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என்று கூறிவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஜீவனா முன்னிலையில் பாலத்த போலீஸ் பாதுக்காப்புடன் வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜி ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மின் இணைப்பு துண்டிப்பு
அப்போது சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், மதிற்சுவர், அலங்கார வளைவுகள் போன்றவை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளப்பட்டன. மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை துண்டித்தனர்.
இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட 7.5 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.35 கோடி இருக்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT