Published : 02 Jul 2022 03:10 PM
Last Updated : 02 Jul 2022 03:10 PM
கோவை: ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தியுள்ளதால் சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தொழிலைக் கைவிடும் நிலை ஏற்படும் என கோவை பம்ப்செட் உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப்பெரும் தொழில் மையங்களில் ஒன்றான கோவையில் பம்ப்செட் உற்பத்தி ஒரு அடையாளமாக விளங்கி வருகிறது. கோவையைப் பொறுத்தவரை விவசாயத்துக்கு, குடிநீர் விநியோகத்துக்கு, வீட்டு உபயோகத்துக்கு, தொழிற்சாலைகளுக்கு என அனைத்து தேவைகளுக்கான பம்ப்செட் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் மோட்டார் பம்ப்செட், அவற்றுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி சார்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் நேரடி ஆர்டர் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் என்ற அடிப்படையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், இத்துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் உள்ளனர்.
இங்கு அரை ஹெச்.பி. முதல் 50 ஹெச்.பி. வரையிலான மோட்டார் பம்ப்செட்டுகள் சிறு, குறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் 500 ஹெச்.பி. வரையிலான பம்ப்செட்டுகளை தயாரிக்கின்றன.
ஏற்கெனவே மூலப்பொருட்கள் விலை உயர்வால் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் பம்ப்செட் விலை உயர்ந்து, கோவை மாவட்டத்தில் பம்ப்செட் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பம்ப்செட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் காட்டிலும், 40 ஆண்டுகளாக தொழிலில் உள்ள சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் காணாமல் போகக்கூடிய நிலை ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ் கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்பட்ட பம்ப்செட்டுக்கு 5 சதவீதம் வாட் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்டி வந்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே வரி வசூலிக்கப்படும். பொருட்களின் விலையும் குறையும் என்றனர். ஆனால் ஜிஎஸ்டி வந்த பிறகு நிலைமை தலைகீழாக உள்ளது.
வாட் வரி 5 சதவீதமாக இருந்ததை, பம்ப்செட்டுகளுக்கு 12 சதவீதமாக உயர்த்தினர். உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக இருந்தது. இந்த வித்தியாசம் பம்ப்செட் துறையில் குளறுபடியை ஏற்படுத்தி வருகிறது. பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என, நாட்டில் உள்ள அனைத்து பம்ப்செட் உற்பத்தியாளர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் யாருடைய கோரிக்கையையும் காதில் வாங்காமல் மத்திய அரசு உற்பத்தி செய்யப்பட்ட பம்ப்செட்டுகளுக்கு 18 சதவீதம் என ஜிஎஸ்டி வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது.
இதனால் பம்ப்செட்டுகளின் விலையை மேலும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். உதாரணமாக, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 5 ஹெச்.பி. மோட்டார் பம்ப்செட் ரூ.30 ஆயிரம் வருகிறது. அதற்கு ஜிஎஸ்டி ஏற்கெனவே ரூ.3,600 செலுத்தும் நிலையில், மேலும் ரூ.1800 அதிகரித்து ரூ.5,400 வரியாக மட்டும் செலுத்த வேண்டியது வரும்.
இதனால், சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இடையில் உள்ள விலை வித்தியாசம் குறையும். இதன்மூலம் நுகர்வோர் பெரிய நிறுவனங்களையே நாடுவர்.
சிறு, குறு நிறுவனங்களின் பம்ப்செட்டுகள் விற்காது. ஆர்டர்கள் கிடைக்காமல் கோவையில் 40 ஆண்டுகளாக தொழிலில் உள்ள சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் காணாமல் போவார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டுமே இருக்கும்.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT