Published : 02 Jul 2022 05:31 AM
Last Updated : 02 Jul 2022 05:31 AM
சென்னை: தஞ்சையில் மாயமான, 300 ஆண்டுகள் பழமையான பைபிள், லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த பைபிளை மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்ற கிறிஸ்தவ மத போதகர், 1682-ல் ஜெர்மனியின் சாக்சானி நகரில் பிறந்தவர். பாலே பல்கலை.யில் படித்த இவர், தூதரன் தேவாலயத்தில் மத போதகராகப் பணியாற்றினார். டென்மார்க் மன்னரின் வேண்டுகோளை ஏற்று, இவரும், கென்ரிக் என்பவரும் தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில், டச்சு காலனி வசமிருந்த பகுதியில் மதபோதகராகப் பணிபுரிய 1706-ல் இந்தியா வந்தனர்.
இங்கு சீகன் பால்க் ஒரு அச்சகத்தை நிறுவி, அதில் தமிழ் மொழியில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் மதம் தொடர்பான நூல்களை வெளியிட்டார். பைபிளின் `புதிய அத்தியாயத்தை' தமிழில் 1715-ல் மொழிபெயர்த்தார். 1719-ல் சீகன் பால்க் காலமானார். அவரால் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சிடப்பட்ட அரிய பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அந்தப் புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசால் கைப்பற்றப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. முதன்முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, விலை மதிப்பில்லாத இந்த பைபிள் திடீரெனக் காணாமல் போனது. இதுதொடர்பாக 2005 அக்.10-ல், சரஸ்வதி மகால் அருங்காட்சியக நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், கண்டுபிடிக்க இயலாத வழக்காக இது முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக 2017அக்.17-ம் தேதி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி, கண்காணிப்பாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேடுகளைப் பார்வையிட்டனர். இதில், சில வெளிநாட்டினர் 2005 அக். 7-ம் தேதி அருங்காட்சியகத்துக்கு வந்து சென்றது தெரியவந்தது. மதபோதகர் சீகன் பால்க்கின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்காக அவர்கள் ஒரு குழுவாக தஞ்சாவூர் வந்ததும், சீகன் பால்க் சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் வலைதளங்களையும் தனிப்படையினர் ஆராய்ச்சி செய்தனர். இதில், 17-ம் நூற்றாண்டில் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டிருந்த ஓர் அச்சகத்தில் அச்சிடப்பட்ட, சரபோஜி மன்னரின் கையெழுத்துடன் கூடிய இந்த பைபிள், கிங்ஸ் கலெக்ஷன் என்ற லண்டன் நிறுவனத்தின் வலைதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த பைபிள் சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் திருடப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, யுனேஸ்கோ ஒப்பந்தம் மூலம் அதை திரும்பக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அந்த பைபிளை யார், எவ்வாறு கடத்திச் சென்றனர் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT