Published : 01 Jul 2022 04:01 PM
Last Updated : 01 Jul 2022 04:01 PM
புதுச்சேரி: புதுச்சேரி அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாநிலச் செயலர்கள் இடையிலான பிரிவு வெளிப்படையானது. ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த முறை நான்கு எம்எல்ஏக்களை அதிமுக வென்றிருந்தது. தற்போது நடந்த பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களில் போட்டியிட்டு, அதிமுக அனைத்து இடங்ளிலும் தோல்வியடைந்தது. அதே நேரத்தில் அவர்கள் இடம் பெற்ற என்ஆர் காங்கிரஸ்-பாஜக அணி வென்று ஆட்சியமைத்தது.தற்போது புதுச்சேரியில் கிழக்கு மாநில செயலராக முன்னாள் எம்எல்ஏ அன்பழகனும், மேற்கு மாநிலச்செயலராக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகரும் உள்ளனர்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அவர்களிடம் இருந்த உரசல் வெளிப்படையாகியுள்ளது. தற்போது மாறி, மாறி இருவரும் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது ஒரே நாளில் இருவரும் குற்றம்சாட்டி பேட்டி அளித்தனர். இரு மாநிலச்செயலர்களும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.
கட்சி, கொடி, சின்னம் இருக்கும் இடத்திலிருப்பேன் மேற்கு மாநில செயலர் உறுதி
புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கட்சியில் பிளவு ஏற்பட்டு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைதி காத்திருக்க நான் விரும்பினேன். அதற்கு எதிர்மாறாக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் என் பகுதி பொதுக்குழு உறுப்பினர்களை விலை பேசினார். நான் கட்சி, கொடி, சின்னம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறேன். இருப்பேன். அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய 4 பேர் முயற்சிக்கின்றனர்.
கட்சி, கொடி, சின்னம் யாரிடம் இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமுமே கட்சி தலைமை யார் என முடிவு செய்ய வேண்டும். புதுச்சேரி மாநில அதிமுகவினர் எனது தலைமையில் செயல்படுவார்கள். அன்றைய தினத்தில் இருந்து அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார். தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை ஏற்றவுடன் புதுச்சேரியில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான்தான் இருப்பேன். " என்று ஓம் சக்தி சேகர் கூறியுள்ளார்.
மேற்கு மாநில அதிமுகவில் 65 சதவீதத்தினர் இபிஎஸை ஆதரிக்கின்றனர்- கிழக்கு மாநில செயலர் அன்பழகன்
புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அரசியல் முதலீடு செய்து லாபம் பெறக்கூடியது அல்ல. புதுச்சேரி அதிமுக மேற்கு மாநிலத்தை சேர்ந்த 11 பொதுக்குழு உறுப்பினர்கள் என் முன்னிலையில் கையெழுத்திட்டனர். அதுமட்டுமின்றி முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். கட்சியின் தலைமைக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். வெற்றி பெறுபவர்கள் தலைமையை ஏற்பேன் என அதிமுக புதுச்சேரி மேற்கு மாநிலச் செயலர் கூறுவது அழகா? நான் எடப்பாடி பழனிசாமியை உறுதிபட ஆதரிக்கிறேன்.
அதேபோல மற்றவர்கள் யாரை ஆதரிக்கிறேன்? என சொல்வார்களா? மேற்கு மாநிலத்தில் 65 சதவீதத்தினர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். நான் ஒரே கட்சியில் விசுவாசமாக பணியாற்றுகிறேன். மேற்கு மாநில செயலாளர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரட்டைத் தலைமை தான் வேண்டும் என்றார். ஆனால் இன்று ஓபிஎஸ், ஈ.பிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய நான்கு பேரில் யார் தலைமை என்றாலும் அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்கிறார்.
நான் வியாபாரி இல்லை. அரசியல்வாதி. நாங்கள் ஓபிஎஸ்ஐ நீக்கிவிட்டோம். எனவே இங்கு அவருக்கு ஆதரவாளர்கள் தானாகவே விலகி விடுவார்கள். ஓபிஎஸின் பினாமி தான் ஓம்சக்தி சேகர்." என்று விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT