Published : 01 Jul 2022 03:32 PM
Last Updated : 01 Jul 2022 03:32 PM
புதுச்சேரி: ஏழை மக்களுக்கான காப்பீடு திட்டத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் ரூ.500 கோடி நிதியை புதுச்சேரிக்கு தர அவரிடம் கோரியுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினவிழா இன்று சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது.
இந்திய சுகாதார ஆணையத்தின் பரிந்துரையின்படி 75வது ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழை எளிய மக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களை கவுரவிக்கப்பட்டனர்.
அதன்படி, புதுச்சேரியிலிருந்து 60 மருத்துவர்களும், காரைக்காலில் இருந்து 8 மருத்துவர்களும், மாகேவிலிருந்து 2 மருத்துவர்களும், ஏனாமிலிருந்து 5 மருத்துவர்களும் மொத்தம் 75 மருத்துவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
''அரசு மருத்துவக் கல்லூரியை மேலும் மேம்படுத்தி சிறப்பு மருத்துவமனையாக கொண்டு வருவதற்கும் அரசு நிதி ஒதுக்கவுள்ளது. புதுவை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் ரூ.500 கோடி நிதி உதவி கேட்டுள்ளோம். மருத்துவக் கல்லூரியை மேம்படுத்தவும் நிதி கேட்டுள்ளோம்.
தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை, எளிய மக்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் உதவுகின்ற ஒரு சிறந்த திட்டம். புதுச்சேரியில் ரூ.6.6 கோடி அளவுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனளிக்கப்பட்டு உள்ளது. ஏழை மக்களுக்கு காப்பீடு திட்டம் உள்ளது. அது அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
புதுச்சேரியில் கரோனா தொற்று ஒரு சில நாட்களில் 10க்கும் கீழும், சில நாட்களில் 30, 35 என்றும், சில நாட்களில் 70 என்ற நிலையில் உள்ளது. கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போட உள்ளோம். தடுப்பூசி போடுவதன் மூலம் கரோனா தொற்று பரவாமல் இருக்கும். தடுப்பூசி போடாதவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று வலியுறுத்தி வருகிறோம்." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT