Published : 01 Jul 2022 07:19 AM
Last Updated : 01 Jul 2022 07:19 AM
திருவள்ளூர்: சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திருவள்ளூர் மாவட்டம் - திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் 4-வது புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அப்பணி, டிசம்பரில் நிறைவு பெறும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, திருவள்ளூர் மாவட்டம் - திருமழிசையில் அமையும் துணைக்கோள் நகரத்தில் 25 ஏக்கர் பரப்பில் 4-வது புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணைக்கோள் நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணி குறித்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்ததாவது: குத்தம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம், 336 கோடி ரூபாய் மதிப்பில், 5 லட்சம் சதுர அடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் என 211 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது.
மேலும், இப்பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக 4 மின் தூக்கிகள், 3 நகரும் படிக்கட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி, தோட்டம். ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்டவை அமைய உள்ளன.
இந்த புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணியில், பிரதான கட்டிடம், நடைமேடைகள், பணிமனை, பயணிகள் தங்கும் அறைகள், கட்டுப்பாட்டு அறை அமைத்தல், பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் உள்ளிட்டவை அமைத்தல் என 45 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
மீதமுள்ள, மேற்கூரைகள் துணை மின் நிலையம் உள்ளிட்ட 55 சதவீத பணிகள் வரும் டிசம்பரில் நிறைவு பெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT