Published : 30 Jun 2022 09:36 PM
Last Updated : 30 Jun 2022 09:36 PM
கோவை: தென்னிந்தியாவில் முதல் முறையாக, திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த உலகில் ஆண்கள், பெண்கள் போல் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் தற்போதைய சூழலில், சமுதாயத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு ஆற்றுகின்றனர். பல்வேறு இடங்களில் திருநங்கைகள் தங்களைப் போல் உள்ளவர்களுடன் இணைந்து சிறு அமைப்பைத் தொடங்கி சேவையாற்றி வருகின்றனர்.
தங்களைப் போல் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளை மீட்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருநங்கைகளின் வாழ்க்கையை மேம்படுத்த, ‘ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்’ கிளப்பின் ஒத்துழைப்புடன், தென்னிந்தியாவிலே முதல் முறையாக திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கிளப் கோவையில் இன்று (ஜூன் 30-ம் தேதி) மாலை தொடங்கப்பட்டது.
இதன் தொடக்க விழாவில், ரோட்டரி கவர்னர் ராஜசேகரன் ஸ்ரீனிவாசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ரோட்டரி மாவட்டம் இளைஞர்கள் சேவைப் பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம், ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கிளப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை தன்ஷிகாவுக்கு, ரோட்டரிக்கான பிரத்யேக பதக்கத்தை அணிவித்து, சுத்தியலுடன் கூடிய மணியை வழங்கினார். பின்னர் இவ்வமைப்பில் இணைந்த திருநங்கைகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முக்கிய இலக்கு: அதைத் தொடர்ந்து, ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ தலைவர் திருநங்கை தன்ஷிகா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருநங்கைகளின் வாழ்க்கையை மேம்படுத்த, சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பை அளித்து மேலே வர இந்த கிளப் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முதலாக ஒடிசாவில் தொடங்கப்பட்டுள்ளது. தேசியளவில் இரண்டாவதாகவும், தென்னிந்திய அளவில் முதலாவதாகவும் இந்த கிளப் தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளாக மாற்றத்தை உணர்பவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றனர். அவர்களுக்கு படிக்க வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய திருநங்கைகளுக்கு மீண்டும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல், படிக்காத திருநங்கைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் ஏற்பாடு செய்து சமுதாயத்தில் அவர்களை மேலே கொண்டு வருதல் ஆகியவை இக்கிளப்பின் முக்கிய இலக்காகும். தற்போது 16 திருநங்கைகள் இக்கிளப்பில் இணைந்துள்ளனர். இதில் 6 பேர் கல்வியை பாதியில் கைவிட்டவர்கள்.
அவர்கள் மீண்டும் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒருவர் சுயதொழிலாக ஸ்டேஷ்னரி கடை வைக்க உதவி கோரியுள்ளார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாங்கள் செய்யும் சேவைகளை பார்த்து, இங்குள்ள மற்ற திருநங்கைகளும் இக்கிளப்பி்ல் இணைவர். பெற்றோர்கள் திருநங்கைகளாக மாறும் தங்களது பிள்ளைகளை, மற்றவர்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேற்றக்கூடாது. மற்றவர்களுக்காக வாழக்கூடாது. உங்களுக்காக வாழ வேண்டும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT