Published : 30 Jun 2022 04:36 PM
Last Updated : 30 Jun 2022 04:36 PM

புதிய முயற்சி: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 291 சென்னை பள்ளிகள் உள்ளன.

இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.50 லட்சம் மாணவர்கள் படிக்கும் வசதிகள் உள்ளது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு வரை 88 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரைதான் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்த மாணவர் சேர்க்கை 1.15 லட்சமாக உயர்ந்தது. கரோனா தொற்று காரணமாக பலர் அரசுப் பள்ளிகளை நாடியதால் இந்த எண்ணிக்கை உயர்ந்தது. இதை தக்கவைக்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சியின் chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளத்தில் The Chennai School Admission form 2022 - 2023 என்ற பகுதியில் இதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பில் மாணவர் பெயர், வயது, சேர விரும்பும் வகுப்பு, பெற்றோரின் தொலைபேசி எண், முகவரி ஆகிவற்றை அளிக்க வேண்டும் .இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தொடர்பு கொண்டு அருகில் பள்ளியில் அவர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x