Published : 30 Jun 2022 03:06 PM
Last Updated : 30 Jun 2022 03:06 PM

பள்ளி ஆசிரியர்கள் நியமன விவகாரம் | “நவீன கொத்தடிமைத்தனத்தின் மற்றொரு வடிவம்” - வேல்முருகன்

பண்ருட்டி வேல்முருகன் | கோப்புப் படம்

சென்னை: “ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்” என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தற்போது 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடமும், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும், 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளன. மொத்தம் 13,331 காலிப் பணியிடங்கள். இந்தப் பணியிடங்களில் இடைக்கால ஆசிரியர்களை நியமிக்க முடிவெடுத்துள்ள பள்ளிக் கல்வித் துறை, அவர்களை ஜூலை 1-ம் தேதி முதல் பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது.

இது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளிகளில் தங்களை பணியமர்த்த கோரி 3-ஆம் நாளாக சென்னை டிஜிபி வளாகத்தில் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். கரோனா நெருக்கடியில் இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறாததால் இந்தத் தேர்வை எழுத ஏழு இலட்சம் பேர் வரை காத்திருப்பதாக கூறப்படுகிறது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருப்பதாக தெரிகிறது. தற்போது அரசுப்பள்ளிகளில் உள்ள 13,331 காலிப் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களை நிரந்தரப் பணிக்கு நியமிக்காமல், இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுமட்டுமின்றி, இடைக்கால ஆசிரியர்களுக்கான தகுதி, பட்டப்படிப்பு மட்டுமே என பள்ளிக் கல்வித்துறை உத்தரவில் குறிப்பிட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க அத்தகுதி போதுமென அரசு கருதுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இடைக்காலமாக நியமிக்கப்பட உள்ள 13,331 பேரில், 90 விழுக்காட்டினர் கற்பித்தலில் அனுபவம் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

13,331 பேருக்கும் சொற்பத் தொகையை கொடுத்து, அவர்களது சேவையை எட்டு முதல் பத்து மாதங்களுக்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டு அவர்களைத் திருப்பி அனுப்புவது, நவீன கொத்தடிமைத்தனத்தின் மற்றொரு வடிவமாகும்.

மேலும், தமிழக அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்றும் தற்காலிக ஆசிரியர் நியமன முறையில் தகுதியற்றவர்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியின் படி, அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 காலிப்பணியிடங்களுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, சென்னையில் போராடி வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x