Published : 30 Jun 2022 01:57 PM
Last Updated : 30 Jun 2022 01:57 PM
தென்காசி: செங்கோட்டை- மயிலாடுதுறை இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா தொற்றுக்கு பிறகு தென் மாவட்டங்களில் அனைத்து ரயில்களும் மீண்டும் படிப்படியாக இயக்கத்துக்கு திரும்புகின்றன. இதில் திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக செல்லும் ஈரோடு, மயிலாடுதுறை லிங்க் எக்ஸ்பிரஸ் மிக முக்கியமான ரயில் ஆகும்.
திருநெல்வேலியில் புறப்பட்டு திண்டுக்கலில் இரண்டு ரயிலாக பிரிக்கப்பட்டு ஒரு பாகம் ரயில் திருச்சி, தஞ்சாவூா் வழியாக மயிலாடுதுறைக்கும், மறுபாகம் ஈரோடுக்கும் செல்லும். இதைப்போல் மறுமாா்க்கமாகவும் இயங்கி வந்தன. இந்த ரயிலால்ஏராளமான பயணிகள் பயனடைந்தனர்.
ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி இணைப்பு ரயில்கள் அனைத்தையும் ரத்து செய்து, 200 கி.மீ.க்கு மேல் இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் விரைவு ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது திருநெல்வேலியில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் தனி ரயில் சேவையாகவும், திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் தனி ரயில் சேவையாகவும் இயக்கப்பட இருக்கிறது.
ஈரோடு - திருநெல்வேலி, மயிலாடுதுறை - திண்டுக்கல் ரயில்கள் வரும் 11-ம் தேதியில் இருந்தும், திண்டுக்கல்- மயிலாடுதுறை ரயில் 12-ம் தேதியில் இருந்தும், திருநெல்வேலி- ஈரோடு ரயில்13-ம் தேதியில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.
திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கும் ரயிலை செங்கோட்டையில் இருந்து மதுரை வரை இயங்கும் ரயிலுடன் இணைத்து செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் 10.35 மதுரையை அடையும். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல்- மயிலாடுதுறை ரயில் 11.30 மணிக்கு புறப்படும்.
செங்கோட்டை- மதுரை மற்றும் திண்டுக்கல்- மயிலாடுதுறை ரயில்களின் நேரம் மதுரை- திண்டுக்கல் இடையே இணைப்பு ரயில் இயக்க ஒத்துப்போவதால் செங்கோட்டை- மதுரை ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யலாம்.
அதேபோல், மதியம் 11.25 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - திண்டுக்கல் ரயிலானது திண்டுக்கல் ரயில் நிலையத்தை மாலை 4 மணிக்கு சென்றடையும். மதுரை- செங்கோட்டை ரயில் மதுரையில் இருந்து மாலை 5.10 க்கு புறப்படும் என்பதால் மயிலாடுதுறை- திண்டுக்கல் ரயிலை மதுரை- செங்கோட்டை ரயிலுடன் இணைத்து இயக்குவது எளிது.
இதனால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- திண்டுக்கல் ரயில் 17 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்படும். மேலும் இந்த ரயில் இயக்குவதற்கு கூடுதல் ரயில் பெட்டிகள் தேவையில்லை.
இவ்வாறு ரயில் இயக்கினால் தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு புதிய பகல் நேர இணைப்பு ரயில் கிடைக்கும். எனவே இது தொடர்பாக தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT