Published : 30 Jun 2022 01:54 PM
Last Updated : 30 Jun 2022 01:54 PM
புதுச்சேரி: தனியார்மயத்தை எதிர்த்து மின்சார மீட்டர் ரீடீங் நாளை முதல் எடுப்பதில்லை என்று புதுச்சேரி மின்துறை போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை ஏற்படுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அவர்களோடு முதல்வர், மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என உறுதியளித்தனர்.
இதையேற்று போராட்டக்குழுவினர் வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்தினர். ஆனால், அரசு அளித்த வாக்குறுதியை மீறி மின்துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைச்சரவை முடிவெடுத்து, மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
அப்போது, பொறியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் தொடர்வார்கள். கூடுதல் பணிகளை பார்க்கமாட்டார்கள். எழுத்துப்பணிகளை முற்றிலுமாக தவிர்ப்போம். மீட்டர் ரீடிங் ஜூலை 1 முதல் எடுக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் புதுவை மின்துறை பொறியாளர் - தொழிலாளர் தனியார்மய போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''தலைமைச் செயலகத்தில் மின்துறை செயலருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கொடுத்த கடிதத்தை ஆராய்ந்தும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் தலைமை அலுவலகத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (ஜூலை1) முதல் எச்டி, எல்டி மீட்டர் ரீடிங் எடுப்பதில்லை, பில் கொடுப்பதில்லை என்ற போராட்டத்தை தொடர்வது. மற்ற அனைத்துப் போராட்டங்களும் தற்காலிகமாக தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT