Published : 11 Jun 2014 08:45 AM
Last Updated : 11 Jun 2014 08:45 AM

கடற்கொள்ளையை ஒடுக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்- அமெரிக்க துணை தூதர் வலியுறுத்தல்

கடற்கொள்ளையை ஒடுக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க துணைத் தூதர் ஜெனிபர் மெக்கண்டயர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு பற்றிய 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அமெரிக்க துணை தூதரகம், வாஷிங்டன் ஸ்டிம்சன் மையம், டெல்லி அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கை சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ஜெனிபர் மெக்கண்டயர் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:

வணிக வளர்ச்சி

இந்திய கடல்சார் வாணிபம் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கடல்சார் வாணிபம் பர்மா, ஜாவா உள்ளிட்ட தூரகிழக்கு நாடுகள் வரை விரிந்து பரவியிருந்தது. நீண்ட பழமை வாய்ந்த கடல்சார் வணிகம் வளர்ச்சி பெற்று வந்திருப்பதுடன் 21-ம் நூற்றாண்டில் பல்வேறு சவால்களையும் எதிர்நோக்கியுள்ளது.

கடந்த 2012-2013-ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுட னான இந்தியாவின் வர்த்தகம் 76 பில்லியன் டாலரை எட்டியது. சர்வதேச அளவில் பொருளாதார தொடர்புகள் குறைந்த பகுதியாக தெற்காசியா உள்ளது. எனவே, வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்க நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தொடர்புகளை அதிகரிக்க அமெரிக்கா அதிக முன்னுரிமை அளித்துவருகிறது. கடந்த ஆண்டு இப்பகுதிக்கு 500 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அமெரிக்காவில் 28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

கடற்கொள்ளை

இந்தியாவில் 90 சதவீத சரக்குப் போக்குவரத்து கடல்மார்க்கமாகத் தான் நடக்கிறது. எனவே இந்தியாவின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக் கும் கடல்வழி தொடர்பு மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய சூழலில், இப்பகுதியில் கடல்சார் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து மேற்கொண்ட கூட்டுநடவடிக்கைகள் காரணமாக 2011-2012-ம் ஆண்டில் சோமாலிய கடற்கொள்ளை சம்பவங்கள் 75 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய கடல் பகுதியில் கடற்கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடற்கொள்ளையை ஒடுக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு ஜெனிபர் மெக்கண்டயர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் ஐ.ஜி. எஸ்.பி.சர்மா சிறப்புரையாற்றினார். இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டுள்ள இந்த கருத்தரங்கம் இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x