Last Updated : 30 Jun, 2022 06:06 AM

 

Published : 30 Jun 2022 06:06 AM
Last Updated : 30 Jun 2022 06:06 AM

காமராசர் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கும் 4 அரசு கல்லூரிகளின் மதிப்பாய்வுக்கு சிறப்பு குழு நியமனம்: கவுரவ விரிவுரையாளர்கள் கலக்கம்

மதுரை: காமராசர் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கும் அரசுக் கல்லூரிகளில் மதிப்பாய்வு செய்ய சிறப்புக்குழுவை நியமித்து பல்கலை. நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலை.யின் கீழ் செயல்பட்ட ஆண்டிபட்டி, கோட்டூர் (தேனி), திருமங்கலம், அருப்புக்கோட்டை, வேடசந்தூர், சாத்தூர் ஆகிய 6 உறுப்புக் கல்லூரிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இதனால், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ஆனால், இங்கு பணியாற்றுவோரின் ஊதியத்தை மட்டும் காமராசர் பல்கலை. வழங்கி வருகிறது.

ஆண்டிபட்டி, கோட்டூரில் மட்டும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் மூலம் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். பிற நான்கு கல்லூரி களிலும் பல்கலை. நியமித்த முதல்வர்களே பணிபுரிகின்றனர்.

திருமங்கலம் உட்பட 4 கல்லூரிகளில் காமராசர் பல்கலை. நியமித்த முதல்வர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கால் அங்கு கோஷ்டிகள் உருவாகி மாறி மாறி துணைவேந்தர் மற்றும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் புகார்கள் குவிகின்றன.

இந்நிலையில், கவுரவ விரிவுரையாளர் களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்ய ஆட்சிக் குழு உறுப்பினர் நாகரத்தினம், முன்னாள் பதிவாளர் வசந்தா, பேராசிரியர் இமயவர்மன், அருப்புக்கோட்டை அரசுக் கல்லூரி முதல்வர் அன்பழகன் ஆகி யோர் அடங்கிய சிறப்புக்குழுவை பல்கலை நிர்வாகம் அமைத்துள்ளது. இக்குழு, கவுரவ விரிவுரையாளர்களின் செயல் திறனை மதிப்பாய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 4 முதல் இப்பணி தொடங்குகிறது.

இது குறித்து கவுரவ விரிவுரையாளர் கள் கூறியதாவது: பிஎச்டி, ஸ்லெட், நெட் போன்ற கல்வித் தகுதியின் அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் 10 முதல் 15 ஆண்டுகளாக பணிபுரிகிறோம். கற்றல் முறை, மாநில தேசிய கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித் தல், புத்தக வெளியீடு, கூடுதல் தகுதி உட்பட 15 விதமான நிலைகளில் எங்களை ஆய்வு செய்வதை, நேர்காணல் நடத்து வதை ஏற்க இயலாது.

பல்கலை.யின் இது போன்ற நடவடிக்கையால் சிலரின் வேலை பறிபோக வாய்ப்புள்ளது. பிரச்சினைகள் அடிப்படையில் சிலரை வேலையைவிட்டு நீக்கும் நடவடிக்கையாக இருக்குமோ என சந்தேகிக்கிறோம். மதிப்பாய்வு செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர், இணை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளோம், என்றனர்.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முத்துராமலிங்கம் கூறுகையில், செயல் திறன் பகுப்பாய்வு குறித்து காமராசர் பல்கலை. எங்களுக்குத் தெரிவிக்க வில்லை.

பல்கலை. நியமித்த முதல் வர்கள் பணிபுரியும் ஓரிரு கல்லூரிகளில் தேவையின்றி மாணவர்களை ஈடுபடுத்தி கோஷ்டியாக செயல்படுவது உண்மை. நாங்களே இது பற்றி விசாரித்துள்ளோம். இது குறித்து பதிவாளரிடம் விவாதிக்கப் படும். யாருக்கும் வேலை பறிபோக வாய்ப்பு இல்லை, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x