Published : 23 Jan 2014 01:55 PM
Last Updated : 23 Jan 2014 01:55 PM
மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் மீண்டும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மக்களவைத் தேர்தலிலும் இக்கூட்டணி தொடர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுவைச் சேர்ந்த ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அதிமுகவின் நா.பாலகங்கா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
அந்தப் பதவிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு அதிமுக நான்கு வேட்பாளர்களையும், திமுக ஒரு வேட்பாளரையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் டி.கே.ரங்கராஜன் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடுவார் என்றும் வரும் 27-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனர் ஆதரவு கேட்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவு தருவதாக அதிமுக கூறியுள்ளதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
"எங்களுக்கு ஆதரவு தருவதாக கூறியிருக்கும் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக் ஆகியோருக்கு நன்றி. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் சே.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த தணியரசு ஆகியோரிடம் ஆதரவு கோருகிறோம்" என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி நிலைக்குமா என்று கேட்டதற்கு, "மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு கொள்ள வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை" என்றார்.
அதேநேரத்தில், கொடநாட்டில் ஜெயலலிதாவுடன் நடந்த சந்திப்பில் மக்களவைத் தேர்தல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT