Published : 29 Jun 2022 08:39 PM
Last Updated : 29 Jun 2022 08:39 PM
சென்னை: ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் என்ஐஏ, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்காக உதவுவது உள்ளிட்ட நலப்பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி சென்னையில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையின்போது அதிகளவில் வசூலிக்கப்பட்டது. ரம்ஜான் முடிந்த பின்னரும் பணம் வசூலிக்கப்பட்டு சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நாகூர் மீரான் மற்றும் மண்ணடி அப்துல்லா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல்துறை டிஜிபி, ஆவடி காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தேன்.
இதுபோன்ற சட்ட விரோத செய்லகளில் சிறார்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. எனவே இதனை தடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது டிஜிபி, ஆவடி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் "மனுதாரருக்கும் எதிர் மனுதாரர்களுக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சினை, நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "இது தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் சமூகத்தை சீரழிக்கும் நிலை தொடர்பான தீவிரமான விஷயம் என்பதால் அரசு கவனம் செலுத்த வேண்டும். மனுதாரர் கூறுவதுபோல நடந்தால் தடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் மனு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT