Published : 29 Jun 2022 01:34 PM
Last Updated : 29 Jun 2022 01:34 PM
சென்னை: “ஏடிஎம் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட ஓட்டுநர் அர்ஜுனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விழுப்புரத்தில் வங்கி ஏடிஎம் மையத்தை கொள்ளையடிப்பதற்காக தாம்பரத்திலிருந்து காரை கடத்திய கொள்ளையர்கள், செங்கல்பட்டு அருகே அதன் ஓட்டுநர் அர்ஜுனை படுகொலை செய்து உடலை வீசியுள்ளனர். இரக்கமின்றி நிகழ்த்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் இதற்கு முன்பும் பல முறை ஓட்டுநர்களை தாக்கி மகிழுந்துகளை கடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அப்போது அவர்களை கைது செய்யாததன் விளைவாக இப்போது கொலை நடந்திருக்கிறது.
கொலையாளிகள் மூவரை காவல்துறை கைது செய்துள்ளது என்றாலும், வட மாநிலங்களில் நடப்பதைப் போன்று கொடூரமாக ஓட்டுநர் அர்ஜுன் கொலை செய்யப்பட்டது வாடகை கார் ஓட்டுநர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் அச்சம் போக்கப்பட வேண்டும்.
ஏடிஎம் கொள்ளையர்களின் பின்னணியை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட ஓட்டுநர் அர்ஜுனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT