Published : 28 Jun 2022 05:50 PM
Last Updated : 28 Jun 2022 05:50 PM
மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மதுரை கிழக்கு தாலுகாவில் முதல் சாகுபடிக்கான விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
முல்லைப் பெரியாறு அணை மூலம் மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையிலும் வாடிப்பட்டி, மதுரை வடக்கு, கிழக்கு தாலுகாக்களில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இரு போக நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜனவரி வரை தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் இரு போக சாகுடி உறுதி செய்யப்படும்.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் போதிய தண்ணீர் இருப்பதால் திட்டமிட்டபடி, ஜூன் 2-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வாடிப்பட்டி, மதுரை வடக்கு, கிழக்கு தாலுக்காக்களில் விவசாய பணி தொடங்கியது. கிழக்கு தாலுகாவில் கருப்பாயூரணி, ஆண்டார்கொட்டாரம், களிமங்கலம், சக்கிமங்கம், அங்காடிமங்கலம், நாட்டார் மங்கலம், குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயப் பணிகள் மும்மரமாக நடக்கிறது.
3 வாரத்திற்கு முன்னதாகவே நாற்று விதைப்பு தொடங்கிய நிலையில், தற்போது நடவு பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டிராக்டர்கள் மூலம் விளை நிலங்களை உழுது நடவுக்கு தயார்படுத்துகின்றனர். சில இடங்களில் விவசாயப் பணிக்கென கூலியாட்கள் கிடைக்காமல் சுணக்க நிலையும் ஏற் பட்டுள்ளது என, விவசாயி்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ரூபன் திட்டத்திற்கான விவசாயிகள் சங்கத் தலைவர் திருப்பதி கூறியது: ''ஆண்டுதோறும் முல்லைப்பெரியாறு அணையில் சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தாலே இரு போக சாகுடி ஓரளவுக்கு உறுதி செய்யப்படும். இவ்வாண்டு உரிய நேரத்தில் ஜூன் 2ல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை மாவட்டத்திலுள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முதல் சாகுடிக்கான நெல் விவசாய பணி தொடங்கியுள்ளது. செப்டம்பர் 3வது வாரத்தில் அறுவடை நடக்கும்.
இதன்பின், அடுத்த போகத்திற்கு தண்ணீர் திறந்தால் அக்டோபரில் 2வது சாகுபடி தொடங்கும். ஜனவரி வரை தண்ணீர் தேவைப்படும். மழை இருந்தால் மட்டுமே தண்ணீர் குறைக்கப்படும். இதுவே நடைமுறையில் இருக்கிறது.
தற்போது, முதல் சாகுபடிக்கான பணி தீவிரமாக நடக்கிறது என்றாலும், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. 100 நாள் வேலைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். 100 நாள் வேலைத்திட்ட ஆட்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம்.
மாவட்ட ஆட்சியர் இதுபற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். விலை குறைவால் நெல்பயிரிடுவதில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. மேலும், வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் சில இடங்களில் நடவை தவிர்த்து, நெல் விதைப்புக்கு மாறியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் பயிர்க் கடன் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விதைப்பு, நடவுக்கு முன்பாக தேவைப்படும் யூரியா உரத் தட்டுப்பாடும் உள்ளது. முதல் சாகுபடிக்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும்'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT