Published : 28 Jun 2022 02:03 PM
Last Updated : 28 Jun 2022 02:03 PM
சென்னை: "கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது" என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வழக்கு தொடர்பான கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார். மேலும், தமிழகத்தில் தற்போது வரை 1100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோயில் நிலங்களில் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவதாக, வழக்குகள் தொடரப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெறும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத் துறை அதிகாரி என்னதான் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுவது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார்.
வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோயில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம். 50 ஆண்டு காலமாக இருக்கின்ற அக்கிரமிப்புகளை அகற்றாமல், இப்போது கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது.
கோயில் நில குத்தகை மூலம் வருமானம் வருவதால், அது இந்து சமய அறநிலையத்துறைக்கு பயனளிக்கும் என்பதால் தான், கோயில் நிலங்களை குத்தகைக்கு விட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT