Published : 28 Jun 2022 01:51 PM
Last Updated : 28 Jun 2022 01:51 PM
'தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்' என்று அச்சிடப்பட்ட சாக்குப் பையில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், அது தமிழர்களின் கைகளில் கிடைத்ததா?
40 ஆயிரம் டன் அரிசி: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
எங்கே போனது பொதி?! - இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு முறையாக சேரவில்லை என்பதே அங்கிருந்து வரும் புகாராக உள்ளது. இலங்கையில் தலைநகர் கொழும்பில் வசிக்கும் கிறிஸ்டினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்து தமிழ் திசை டிஜிட்டலை தொடர்பு கொண்டார். அவர் அங்கு வாழும் தமிழர். தமிழகத்தில் கல்வி பயின்று இலங்கையில் தற்போது பணியில் உள்ளார்.
கிறிஸ்டினா கூறியது: “நிலைமை இங்கு நாளுக்கு நாள் ரொம்ப மோசமாகுது. எரிபொருள் இல்லை. வீட்டிலிருக்கும் கேஸ் இன்னும் 10 நாட்களுக்கு மட்டும்தான் வரும். அரிசி இல்லை. கடைகளில் எந்த மளிகைப் பொருட்களும் கிடைப்பதில்லை. தமிழக அரசு நிவாரணப் பொருட்கள் அறிவித்தவுடனேயே எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அந்த பொதி கைக்கு வரும் என்று நினைத்தோம். இன்று வரும், நாளை வரும் என்று காத்துக்கிடந்தோம். எங்களுக்கு எதுவும் வந்தபாடில்லை.
நாங்கள் இங்கு புள்ளைகளுடன் ரொம்ப சிரமப்படுகிறோம். ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக தமிழர்களுக்கு பொதி கிடைக்கிறது. அரசாங்கத்தில் உயர் அதிகாரி தொடங்கி கிராமாதாரி வரை அவரவர் குடும்பத்துக்கும் அவர்களை சேர்ந்தவருக்கும் பொதிகளை பங்குபோட்டுக் கொள்கின்றனர். கால்கடுக்க எத்தனைக்கு தான் கியூவில் நிற்பது. அப்படி நின்றாலும்கூட பலன் இல்லை. உங்களுக்கு சொந்த வீடு இருக்கா? வேலை இருக்கா? சம்பளம் வருதா? என ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு பொதியை தராமல் என்ன சொல்லி தட்டிக்கழிக்கலாமோ அத்தனையும் செய்கின்றனர்.
என் மாமனார், மாமியார் வேறு ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர். ஒரு வாடகை வீட்டில் தான் உள்ளனர். ஆனால் அவர்களின் பொதியை அவர்கள் பெயரைச் சொல்லி யாரோ வாங்கிச் சென்றுள்ளனர். இப்படித்தான் நாங்கள் தவிக்கிறோம்.
எங்களை எல்லாம் தமிழக அரசு கூப்பிட்டுக் கொள்ளாதா என்று ஏங்குகிறோம். தமிழ்நாட்டிலிருந்து வரும் பொருட்கள் எங்களுக்குத் தானே கிடைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் நேரடியாக தலையிட்டு எங்களுக்கு உதவுவார் என்று நாங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். முதல்வர் அவர்களே... நீங்கள் அனுப்பும் பொதி எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டுகிறோம். கைக்கும், வாய்க்கும் எட்டாமல் பொதியை கண்ணால் மட்டும் பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்” என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
அவரைப் போலவே அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்கள் பலரின் கோரிக்கையும் இதுவாகவே உள்ளது. “தமிழக அரசு அனுப்பும் நிவாரணம் தமிழர்களாகிய எங்களுக்கும் கிடைக்கட்டும் இல்லாவிட்டால் பட்டினியால் நாங்கள் செத்தொழிவோம்” என்று கிறிஸ்டினாவின் குடியிருப்பில் வசிக்கும் பெண்ணும் வேதனை தெரிவிக்கிறார்.
“தலைநகர் கொழும்புவிலேயே இதுதான் நிலைமை என்றால் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையையும் நினைத்துப் பாருங்கள்” என்று ஒரு நபர் கூறினார்.
ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அனைவருக்கும் சரியாக நிவாரண உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பொருள், தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது என்று அங்கு வாழும் சமூக ஆர்வலர் ஒருவரும் கூறுகின்றார்.
இலங்கைத் தமிழர்களின் குரலுக்கு அரசு செவி கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT