Published : 28 Jun 2022 12:00 PM
Last Updated : 28 Jun 2022 12:00 PM
சென்னை: மிகக் குறைந்த சம்பளத்தில் பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் வேலைக்காகக் காத்திருக்கும்போது, மிகக் குறைந்த சம்பளத்தில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் குறைந்துள்ளதாக தேசிய சாதனை ஆய்வு அமைப்பு, புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது. தேசிய சராசரியைக் காட்டிலும் கல்வித் தரம் குறைந்துள்ள நிலையில், போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர ஆசிரியர்களின் சம்பளத்தில், பாதியாவது தற்காலிக ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்க வேண்டாமா? மிகக் குறைந்த சம்பளத்தில், அதுவும் தற்காலிக அடிப்படையில் பணி வழங்கும்போது, அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? தமிழகம் முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழலில், யாரை ஏமாற்ற இந்த பணி நியமன உத்தரவு?
அண்மையில் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன. தாய்மொழியான தமிழ்ப் பாடத்திலேயே 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தியாக வேண்டிய சூழலில் இருக்கிறோம். நடப்பாண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,896 கோடி எனும் பிரம்மாண்டமான தொகையை ஒதுக்கிய நிலையில், ஆசிரியர்கள் நியமனத்தை தற்காலிக அடிப்படையில் மேற்கொள்வது ஏன்?
தற்காலிக ஆசிரியர் நியமனம் எனும் முடிவை உடனடியாக கைவிட்டு, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.'' இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...