Published : 28 Jun 2022 11:33 AM
Last Updated : 28 Jun 2022 11:33 AM

விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: "44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதால், தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக் கூடிய மாநிலமாக மாறப்போகிறது. இந்த போட்டியை நடத்துவதன் மூலமாக, தமிழக அரசு பெருமையடைகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘தி இந்து’ குழுமத்தின் சார்பில் நடைபெறும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் தென்னக விளையாட்டு (Sportstar – South Sports Conclave) மாநாடு இன்று (ஜுன் 28) நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் பேசியது: " விளையாட்டுத் துறையில் முன்னோக்கியப் பாய்ச்சலில் தமிழகம் இன்று சென்று கொண்டிருக்கிறது. வரும் ஜூலை 28-ம் தேதியன்று, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடக்கவிருப்பது நமக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பெருமை.

200 நாடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், பங்கேற்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா முதல்முறையாக சென்னையில் நடைபெறவிருக்கிறது. 2022-ம் ஆண்டுக்கான போட்டியை, உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் அமைப்பு அறிவித்தது. எனவே இந்த போட்டியை தங்கள் நாடுகளில் நடத்த பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழக அரசு சார்பில் முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது அரசு உரிய நேரத்தில், உரிய நடவடிக்கை எடுத்ததால், அந்த வாய்ப்பு சென்னைக்கு கிடைத்தது. இந்தியாவில் இந்தப் போட்டி நடப்பது இது முதல்முறை, அப்படி முதல்முறையாக தமிழகத்தில் நடப்பதுதான் தமிழகத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி.

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என 2500 பேர் உலகம் முழுவதும் இருந்து போட்டிக்கு வரவுள்ளனர். இதனால் சர்வதேச அளவில்,தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக் கூடிய மாநிலமாக மாறப்போகிறது. இந்த போட்டியை நடத்துவதன் மூலமாக, தமிழக அரசு பெருமையடைகிறது. இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த மாநில அரசு 92 கோடியே 13 லட்சம் ரூபாய் நித ஒதுக்கீடு செய்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை சில வாரங்களுக்கு முன்னர் நான் வெளியிட்டேன்.

சதுரங்க விளையாட்டில் இருக்கிற ஒரு குதிரை போலவே, இலச்சினை வடிவமைக்கப்பட்டு, அது வணக்கம் சொல்லக்கூடிய வகையில் காணப்பட்டது. தமிழ் முறைப்படி அது வேட்டி,சட்டை அணிந்துகொண்டு அதற்கு தம்பி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ள நேரத்தில், இந்த மாநாடு நடப்பது மிகமிக பொருத்தமாக இருக்கிறது.

நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவன்தான். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நான் தவறவிடமாட்டேன். பள்ளிக் காலம் முதல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பவன். மேயராக இருந்தபோதும், கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு நான் விளையாடி இருக்கிறேன். எத்தகைய பணி சூழலாக இருந்தாலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்த்துவிடுவார்.

விளையாட்டு போட்டிகள் என்பது விளையாடுபவர்களை மட்டுமல்ல போட்டிகளை பார்க்கக்கூடியவர்களையும் உற்சாகமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. விளையாடுபவர்களை விளையாட்டு வீரர்கள் என்று கூறுகிறோம். அத்தகைய கம்பீரமான துறைதான் இந்த விளையாட்டுத்துறை. இத்தகைய விளையாட்டுத்துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு அறிவிப்பை செய்தோம். அதாவது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடியவர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடியவர்களுக்கு 2 கோடி ரூபாய், வெண்கலம் வெல்லக்கூடியவர்களுக்கு 1 கோடி ரூபாய் என்று அறிவித்தோம். இது மிகப்பெரிய பரிசுத்தொகை. விளையாட்டு வீர்களுக்கு முதலில் தேவையானது ஊக்கம்தான். அந்த ஊக்கத்தை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் இந்த அறிவிப்பை செய்தோம். டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடிய வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், 55 லட்சம் ரூபாய் வழங்கினோம். விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான, தாராளமான உதவிகளை இந்த அரசு செய்துகொண்டுள்ளது, செய்யவும் போகிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x