Published : 28 Jun 2022 06:41 AM
Last Updated : 28 Jun 2022 06:41 AM
பெங்களூரு: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 1996-ல் வழக்குப்பதிவு செய்தது.
இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான பட்டுப் புடவைகள், மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், கைக் கடிகாரங்கள், வெள்ளிப் பொருட்கள், தங்க, வைர நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
வழக்கு விசாரணை பெங்களூருவில் நடைபெற்றதால் 2013-ம் ஆண்டு ஜெயலலிதாவின் பொருட்கள் கர்நாடகா அரசின் கஜானாவுக்கு மாற்றப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்து அனைவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருந்தபோதே ஜெயலலிதா 2016-ல் மறைந்தார்.
இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, பெங்களூரு மாநகர நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘‘ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தமிழக மற்றும் கர்நாடக கருவூலத்தில் கடந்த 26 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் 11,344 புடவைகள், காலணிகள் 750, கைக்கடி காரங்கள் 91, அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் 146, ஏசி 44, 700 கிலோ வெள்ளி பொருட்கள், 468 வகையான தங்கம், வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள், ரத்தின கற்கள் ஆகியன உள்ளன. இதுதவிர ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 514 மற்றும் ரூ.32 ஆயிரத்து 688 ரொக்கம் உட்பட 57 வகையான உடமைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் துணிமணிகள், மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை நீண்ட காலமாக உபயோகிக்காமல் இருந்தால் அவை வீணாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே 26 ஆண்டுகளாக கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் உடமைகளை பொது ஏலத்தில் விட்டால், அவரது ஆதரவாளர்களும் தொழிலதிபர்களும் அதிக தொகைக்கு வாங்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT