Published : 13 May 2016 03:08 PM
Last Updated : 13 May 2016 03:08 PM
பாளையங்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்த எந்த வாக்குறுதிகளையும் அவர் அளிக்கவில்லை.
தமிழகத்தில் சென்னையில் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய முதல்வர், தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக பாளையங்கோட்டையில் நேற்று பேசினார்.
2014-ல் வாக்குறுதி
கடந்த மக்களவைத் தேர்தலின்போது இதே மைதானத்தில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி அவர் பேசும்போது,
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சிக்கு இலக்கான பகுதிகளை வளப்படுத்தும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
நேற்றைய பிரச்சார கூட்டத்தில் தென்மாவட்டங்கள் தொடர்பான திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதையும் அவர் அறிவிக்கவில்லை. தனது 1 மணிநேர உரையில், 20 நிமிடங்களுக்கு மேல் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளை அவர் நினைவுபடுத்தி பேசினார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், அவரது ஆட்சி குறித்தும் விமர்சித்தார்.
உற்சாக வரவேற்பு
இக்கூட்டத்துக்கு வந்த முதல்வருக்கு செண்டை மேளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடைக்கு வருமுன் அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முளைப்பாரி ஏந்திய நூற்றுக்கணக்கான பெண்கள் வழிநெடுகிலும் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர்.
குளுக்கோஸ், பிஸ்கெட்
பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களும், ஆண்களும் சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்க நேர்ந்தது. அவர்களது தாகம் தணிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தண்ணீர் பாக்கெட், குளுக்கோஸ் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், முதல்வர் உருவம் பொறித்த தொப்பி ஆகியவற்றை அதிமுகவினர் விநியோகித்தனர். திடலுக்குள் பெண்களும், ஆண்களும் வருமுன்னரே நாற்காலிகளில் அவை தயாராக வைக்கப்பட்டிருந்தன.
பொதுக்கூட்ட திடலில் ராட்சத பலூன்கள் முதல்வரை வரவேற்கும் வகையில் பறக்கவிடப்பட்டிருந்தன. பிரம்மாண்ட கட்அவுட்களும் வைக்கப் பட்டிருந்தன.
பார்வையாளர்களை கவரும் வகையில் மேடை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் வரை வரவேற்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருந்த வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்திட என்ற வரவேற்பு பாடல் தொடர்ந்து இசைக்கப்பட்டது.
மாற்று கட்சியினர்
ஒருசில கூட்டணி கட்சியினர் கொடிகளை ஏந்தி வந்தனர். ஆனால் போலீஸார் கொடிகளுக்கு அனுமதி மறுத்ததால், கம்பங்களில் இருந்து கொடிகளை அகற்றி அவற்றை தலையில் தொண்டர்கள் கட்டிக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜெயலலிதாவுடன், சசிகலாவும் வந்திருந்தார். அவர் மேடைக்கு கீழ் இருக்கையில் அமர்ந்திருந்தார். இதுபோல் தம்பித்துரை எம்.பி, இசையமைப்பாளர் தேவா, அதிமுகவின் தென்மாவட்ட முக்கிய நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முதல்வர் உரையாற்றி முடித்தபின் அவர் முன்னிலையில், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். அந்த நிர்வாகிகளுக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை முதல்வர் வழங்கினார்.
திமுகவை சேர்ந்த பரமசிவன், எஸ்.சிவா, தேமுதிகவை சேர்ந்த எஸ்.முருகையா, ஜோதிமுருகன், மதிமுகவை சேர்ந்த ஜி.கஜேந்திரன், தமாகாவை சேர்ந்த நாராயணன்,எஸ். ராஜகோபால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.எஸ்.சரவணகுமார், எம்.கிருபாகரன், சி.முருகேசன், பாஜகவை சேர்ந்த ஆர்.பால்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த எஸ்.கருப்பையா உள்ளிட்ட பலரும அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் முதல்வருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT