Published : 05 May 2016 04:53 PM
Last Updated : 05 May 2016 04:53 PM

முன்னாள் - இந்நாள் அமைச்சர்கள் களமிறங்கும் ஆத்தூர்: பிரச்சாரத்தில் வார்த்தை மோதல்களால் பதற்றம்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் இந்நாள் அமைச்சர் ஆர். விசுவநாதன், முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனம், வார்த்தை மோதல்களால் தொகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தென்மாவட்டங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக ஆத்தூர் மாறி உள்ளது. அதிமுகவில் முக்கிய இடம் வகித்த நத்தம் ஆர். விசுவநாதன், திமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளராக உள்ள இ. பெரியசாமி இடையே நேரடிப் போட்டி நிலவுவதுதான் இதற்குக் காரணம். திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் இ.பெரியசாமி அமைச்சராகவும், அதிமுக ஆட்சியில் ஆர்.விசுவநாதன் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனர். வழக்கமாக நத்தம் தொகுதியில் போட்டியிடும் ஆர்.விசுவநாதன், தற்போது தலைமையின் உத்தரவுக்கிணங்க ஆத்தூரில் களம் இறங்கி உள்ளார். இ.பெரியசாமி நான்கு முறை இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். தொகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், இல்ல விழாக்களில் தவறாமல் பங்கேற்பதால் மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக இருப்பதாக திமு கவினர் தெரிவிக்கின்றனர்.

தனது பிரச்சாரத்தின்போது பணமா, பாசமா என்று மக்களிடம் கேள்வியெழுப்பி வருகிறார் இ. பெரியசாமி. அதே சமயம், தனி நபர் விமர்சனமும் கடுமையாக உள்ளது. அதிமுக தலைமை விசுவநாதனை ஆத்தூருக்கு அனுப்பி வைத்ததே அவர் தோற்க வேண்டும் என்பதற்காகத்தான் என திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் ஆர். விசுவநாதன் தனது பிரச்சாரத்தில் ஆத்தூரில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார். மேலும் தான் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த நத்தம் தொகுதியில் சாலைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளதாகவும், ஆத்தூர் தொகுதியையும் அதேபோல வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகவும், தொடர்ந்து திமுகவின் பிடியில் இருக்கும் ஆத்தூரை மீட்கவே தன்னை இங்கு ஜெயலலிதா அனுப்பி உள்ளதாகவும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இருவரின் பிரச்சாரத்திலும் தனிநபர் விமர்சனங்கள் அவ்வப்போது எழுவது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சர் விசுவநாதன் வேட்புமனு தாக்கலின்போது தொகுதி தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர் தனிநபர் விமர்சனம், தகாத வார்த்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்துவதாக வாய்மொழியாக புகார் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து சிலர் திமுகவில் இணைவதும், திமுகவில் இருந்து சிலர் அதிமுகவில் இணைவதுமாக நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன.

‘பணத்தை கொடுத்து வெற்றி பெற பார்க்கிறார். நான் உங்களுடன் எப்போதும் இருப்பேன். அவர் வெளியூர் வேட்பாளர்,’ என்று இ.பெரியசாமி பேசிவருகிறார். இதற்கு விசுவநாதனும், தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.

இரு வேட்பாளர்களின் தொண்டர்கள் பலம், பணபலம், பிரச்சார பலம் மக்களை திகைக்க வைத்துள்ளது.

இருவரின் பிரச்சாரத்திலும் கட்சியினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்கு அனுப்பி வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், இருவரின் பிரச்சாரமும் தீவிரமடையும்போது தொகுதியில் பதற்றம் உருவாகலாம் என கண்டறியப்பட்டுள்ளதால், ஆத்தூர் தொகுதியை மாவட்ட நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x