Published : 28 Jun 2022 06:32 AM
Last Updated : 28 Jun 2022 06:32 AM
சென்னை: சுவரோவியம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள திருநங்கைகள் இப்பணியால் முன்னேற்றத்துடன், மகிழ்ச்சியும் கிடைப்பதாக கூறுகின்றனர்.
சென்னை மாநகரில் ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பல்வேறு கட்டிட முகப்புகள், சுற்றுச்சுவர்களில் கண்ணைக் கவரும் வண்ணமயமான ஓவியங்களை காண முடிகிறது.
காண்போர் மத்தியில் இது புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுகிறது. இவ்வாறு ஓவியம் தீட்டும் பணியில் தொழில் முறை ஓவியர்களை தாண்டி, பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இந்த கலைப் பணியில் தற்போது திருநங்கைகளும் இணைந்துள்ளனர்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள ‘அரவாணி ஆர்ட் புராஜக்ட்’ என்ற தொண்டு நிறுவனம், திருநங்கைகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுவரோவிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகள் சமீபத்தில் வரைந்துள்ள சுவரோவியங்கள் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.
இது தொடர்பாக இப்பணியில்ஈடுபட்ட காஞ்சனா வெங்கடேசன்கூறியதாவது: அரவாணி ஆர்ட் புராஜக்ட் அமைப்புதான் திருநங்கைகளுக்கு சுவரோவியப் பயிற்சிவழங்கி, அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது. இந்த அமைப்புடன் இணைந்து 6 ஆண்டுகளுக்குமேலாக பணியாற்றி வருகிறேன்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள திருநங்கைகள் சிறு குழுவாக இணைந்து, அங்கு சுவரோவியத்துக்கான வாய்ப்பு வரும்போது இணைந்து பணியாற்றுகிறோம். ஆர்வமுள்ள, ஆதரவற்ற இளம் திருநங்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் இணைத்து, அவர்களும் இப்பயிற்சியை பெற வழிகாட்டுகிறோம்.
சென்னையில் கண்ணகி நகர் குடியிருப்பு, திருவான்மியூர் ரயில் நிலையம், சில அரசு அலுவலகங்கள், 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள், பெங்களூருவில் உள்ள போன் பே தலைமை அலுவலகம், வெளிநாடுகளின் பன்னாட்டு நிறுவன கட்டிடங்கள் மட்டுமின்றி, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஓவியம் வரைந்துள்ளோம்.
தற்போது ‘துவக்கம்’ என்ற அமைப்பு மூலமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுவரோவியம் வரையும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, தூத்துக்குடி மீனவர் குடியிருப்பில் சுவரோவியம் வரையும் பணியை வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளோம். வேலை என்பதை தாண்டி, இப்பணி எங்களுக்கு உற்சாகம், நம்பிக்கையை தருகிறது.
சுயசார்புடன் வாழ நினைக்கும் திருநங்கைகள் பலர் முன்னேற்றப் பாதையை தேடி பயணிக்கிறோம். பலர் அதற்கு வாய்ப்பு தந்து உதவ முன்வருகின்றனர். ஆனால், சமூக கட்டமைப்பு இடையூறாக உள்ளது. இந்த நிலை மாற, திருநங்கைகளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அனைவரும் தங்கள் சமூகப் பார்வையை மாற்றி உறுதுணையாக இருந்தாலே போதும் திருநங்கைகளும் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT