Published : 27 Jun 2022 03:41 PM
Last Updated : 27 Jun 2022 03:41 PM
சென்னை: "6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு, ரூ.1000 மாத உதவித் தொகை தொடர்பாக நிறைய விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதல் நாளிலேயே 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இத்திட்டத்தை முதல்வர் ஜூலை மாதத்தில் தொடங்கிவைப்பார்" என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அரசுப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், எல்லாவற்றிலும் சேர்த்து, தொழிற் கல்வி (Vocational Course) படித்த மாணவர்களுக்கு இரண்டு சதவீத இடஒதுக்கீடு கொடுத்து, அனைத்து இடங்களிலும், தொழிற் கல்வி படித்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த படிப்பை படிக்கின்ற மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்கிவிடுவர். இவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளிலேயே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கிடைக்கிறது. எனவே பொறியியல் கல்லூரிகளில் இநதாண்டு முதல் தொழிற் கல்வி படித்தவர்களுக்கு அனைத்து கல்லூரிகளிலும் இரண்டு சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும்.
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு, ஆயிரம் ரூபாய் மாத உதவித் தொகை தொடர்பாக நிறைய விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள், மாணவிகள் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்து, அதற்கான விண்ணப்பங்களை அளித்துக் கொண்டுள்ளனர். முதல் நாளிலேயே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த பெண்கள், எந்தக் கல்லூரியில், எத்தனை பேர் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கையும் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த தகவல்கள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் சரி செய்யப்பட்ட பின்னர், முதல்வர் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ஜூலை மாதத்தில் தொடங்கிவைப்பார்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர்தான், கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் தனியார், அரசு கலைக் கல்லூரிகளில் வரும் ஜூலை 18-ம் தேதி முதல் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
வாசிக்க > ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெற தகுதிகள் என்ன? எங்கு விண்ணப்பிப்பது? - முழுத் தகவல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT