Published : 27 Jun 2022 01:00 PM
Last Updated : 27 Jun 2022 01:00 PM
சென்னை: "துரோகத்தின் அடையாளம் என்று பார்த்தால், அண்ணன் ஓபிஎஸ்-தான் என்று கூற வேண்டும். துரோகம் என்பதே அவருடன் உடன்பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், நமது அம்மாவில் அவரை எப்படி ஒரு அங்கமாக வைத்திருக்க முடியும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று (ஜூன் 27) கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கட்சியை வழிநடத்துகின்ற வகையில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெரும்பான்மையான கிட்டத்தட்ட 74 தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ள சூழ்நிலையில், இதில் 65 பேர் வருகை தந்துள்ளனர். 4 பேர் இந்த கூட்டத்திற்கு வரவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளனர். பண்ருட்டி எஸ்.ராமசந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை. திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாக கடிதம் கொடுத்துள்ளார். அதேபோல், புத்தி சந்திரன், ஜஸ்டின் செல்வன் ஆகியோர் உடல்நிலை சரியில்லை என்று கடிதம் அளித்துள்ளனர். எனவே இந்த தலைமைக் கழக கூட்டத்திற்கு 5 பேர் மட்டுமே வரவில்லை.
இந்த கூட்டத்தில், வருகின்ற 11.7.2022 அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பிதழை தபாலில் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு மேலும் பல பொருள்களின் கீழ் விவாதிக்கப்பட்டு அதுதொடர்பான முடிவும் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மிகவும் ரகசியமானது" என்று கூறினார்.
இந்த கூட்டம் செல்லாது என்று ஓபிஎஸ் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்," அதாவது தெளிவாகவே, முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கிட்டத்தட்ட 51 நிமிடம், அதிமுக சட்ட விதிகளை தெளிவாக எடுத்து கூறியுள்ளார். பிரிவு 20 அ-7 இல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழ்நிலையில், கட்சியை வழிநடத்துவதற்கு தலைமைக்கழக நிர்வாகிகள் அதிகாரம் படைத்தவர்கள். அதன் அடிப்படையில்தான், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது. ஓபிஎஸ்-க்கு அடிப்படை விதியே தெரியவில்லை என்றால், நான் என்ன சொல்வது. தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம், தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவரை ஒருகாலத்திலும் எழுப்ப முடியாது" என்றார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான முரசொலி செய்தி தொடர்பான கேள்விக்கு, " சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒரு கட்சி திமுக, அது அனைத்து தமிழர்களுக்கும் தெரியும். காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு துரோகம், கட்சத்தீவை தாரை வார்த்துக் கொடுப்பதற்கு பச்சைக் கொடி காட்டி மீனவர்களுக்கு துரோகம், முல்லைப்பெரியாறு, முள்ளிவாய்க்கால் படுகொலை, ஒன்றரை லட்சம் நமது தொப்புள்கொடி உறவுகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றைக்கு தமிழகத்தில் யாருடைய ஆட்சி இருந்தது.
ஆதரவை இவர்கள் விலக்கிக்கொண்டால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே போயிருக்கும். அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி ஒரு வார்த்தைக்கூட ஆட்சியை வாபஸ் பெறுவதாக சொல்லவில்லை. எனவே தமிழீழ மக்கள் திமுகவை நினைத்து கொதித்துப் போயுள்ளனர். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என இலங்கையில் உள்ள தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழித்ததுதான் திமுக. இவர்கள் துரோகத்தைப் பற்றி பேசலாமா? துரோகத்தினுடைய மொத்த உருவமே திமுகதான்" என்று அவர் கூறினார்.
ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, " அதை உடனடியாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, " தொடர்ந்துவந்து துரோகத்தின் அடையாளம் என்று பார்த்தால், அண்ணன் ஓபிஎஸ்-தான் என்று கூற வேண்டும். ஏனென்றால், ஒட்டுமொத்தமாக, ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்து தான் சார்ந்திருக்கின்ற இயக்கத்துக்கு செய்த துரோகங்கள், எந்தளவுக்கு அவர் துரோகம் செய்தார் என்பதற்கு நேற்றைய தினம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
எனவே துரோகம் என்பதே ஓபிஎஸ் அவருடன் உடன்பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், நமது அம்மாவில் அவரை எப்படி ஒரு அங்கமாக வைத்திருக்க முடியும். அதனால், நீக்கப்பட்டுள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒருமனதான பதில் கிடைக்கும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT