Last Updated : 27 Jun, 2022 07:07 AM

 

Published : 27 Jun 2022 07:07 AM
Last Updated : 27 Jun 2022 07:07 AM

பொன்னேரி: ஆரணி ஆறு தடுப்பணை பணி ஜூலையில் நிறைவு: உவர்ப்பு நீர் உட்புகாமல் தடுக்கும் பணியும் தீவிரம்

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணையும்் பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் உட்புகாதவாறு அமைக்கப்படும் அடிமட்ட தடுப்புச் சுவர் பணியும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆண்டார்மடத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கேதடுப்பணை மற்றும் பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் உட்புகாதவாறு அடிமட்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலை இறுதியில் முடிவுக்கு வரும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறான ஆரணி ஆறுஆந்திர மாநிலம், நகரி மலையடிவாரத்தில் உருவாகிறது. அங்கிருந்து 132 கி.மீ., பயணித்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 66 கி.மீ.செல்லும் ஆரணி ஆற்றில், செழியம்பேடு ஆழ்ஏரி, எளாவூர் காட்டேரி உள்ளிட்ட 211 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது.

மழைக்காலங்களில், ஆந்திர மாநிலம்- பிச்சாட்டூரில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது. பழவேற்காடு ஏரி நீர்மட்டம் உயரும்போது, ஏரியின் உவர்ப்பு நீர், ஆரணி ஆற்றில் உட்புகுந்து, நிலத்தடி நீர் உவர்ப்பு நீராக மாறிவிடுகிறது.

இதனை தடுக்கும் வகையில், பொன்னேரி அருகே ஆண்டார்மடம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் உவர்ப்பு நீர் உட்புகாதவாறு அடிமட்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, நீர்வள ஆதாரத் துறையின் ஆரணி ஆறு வடிநில கோட்டம் சார்பில் கடந்தஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகநடைபெற்று வருகிறது.

இப்பணி குறித்து, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ரூ.13 கோடி மதிப்பில் நபார்டு வங்கி நிதி உதவியில் நடந்துவரும் இப்பணி 2022 ஜனவரியில் முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக திட்டமிட்டப்படி முடிக்க இயலவில்லை. தற்போது பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

அதன்காரணமாக, 130 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம், 0.75 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை மற்றும் 11 ஷட்டர்கள் அமைக்கும் பணி,தடுப்பணையின் கீழே 130 மீட்டர் நீளம் உள்ள உவர்ப்புநீர் தடுப்பு அடிமட்ட சுவர் அமைக்கும் பணி, தடுப்பணையின் இருபுறமும் 240 மீட்டர் நீளம், 7 மீட்டர் உயரம், 4.4 மீட்டர் அகலம் கொண்ட வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆகியவற்றில் சுமார் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

தடுப்பணையின் ஷட்டர்களை இயக்கும் தளம் மற்றும் தடுப்பணையின் முன்னும் பின்னும் 2 கி.மீ., தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தும் பணி என, 10 சதவீத பணிகளே தற்போது நடைபெற்றுள்ளன. அப்பணிகள் வரும் ஜூலை இறுதியில் முடிவுக்கு வந்து, தடுப்பணை மற்றும் அடிமட்ட தடுப்புச் சுவர் பயன்பாட்டுக்கு வரும்.

இதன்மூலம், தடுப்பணையில் 500 மில்லியன் கனஅடி நீரை சேமிக்க முடியும். உவர்ப்பு நீர் உட்புகுவது முற்றிலும் தடுக்கப்பட்டு 8 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன்மூலம் விளைநிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x