Published : 26 Jun 2022 06:43 PM
Last Updated : 26 Jun 2022 06:43 PM

34  உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்: அதிமுக வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? 

சென்னை: 34 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் இந்த படிவங்களை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 30 ம் தேதி பல்வேறு காரணங்களுக்காக காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 20 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 498 பதவிகளுக்க தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தவிர்த்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், 2 நகராட்சி வார்டு உறுப்பினர், 8 பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் ஆகும். இதன்படி நாளை மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 1 வார்டு உறுப்பினர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஒரு வார்டு உறுப்பினர், தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், மயிலாடுதுறை நகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், ஈரோடு மாவட்ட அம்மா பேட்டை பேரூராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், அத்தாணி பேரூராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர்,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், கனாடுகாத்தான் பேரூராட்சியில் ஒரு உறுப்பினர், தஞ்சாவூர் மாவட்ட அய்யம் பேட்டை பேரூராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், விருநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், விருநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர் நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், கடலூர் மாவட்டம் 26 வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், புதுக்கோட்டையில் 7 வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் சார்ந்தவர்களின் தலைவர்கள் கையெழுத்து இட வேண்டும். எடுத்துகாட்டாக அதிமுகவில் பொதுச் செயலாளர் இருந்தால் அவர்தான் இந்த படிவங்களில் கையெழுத்து இட வேண்டும். அந்தப் பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருந்தால் அவர்கள்தான் இந்தப் படிவங்களில் கையெழுத்து இடுவார்கள்.

தற்போது அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக இந்த படிவத்தில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஏ மற்றும் பி படிங்களை வேட்புமனுக்கள திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். இதன்படி அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30 ஆம் தேதி மாலைக்குள் இந்த படிவத்தை சமர்பிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x