Published : 26 Jun 2022 03:22 PM
Last Updated : 26 Jun 2022 03:22 PM
சென்னை: சனாதனமும் மதமும் வேறு வேறு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி" அறிவியல் வளர்ச்சி,தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிக பெரிய சக்தியை வழங்கியுள்ளது. அது மிக பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த உலகத்தை பல முறை அழிக்கக் கூடிய சக்தி பல நாடுகளிடம் தற்போது உள்ளது. நீண்ட காலமாக வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்ததால் பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் காலச்சரத்திலும் பெரிய அளவில் இழந்தோம். வெள்ளையர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறிய பின்னர் இந்தியாவில் உள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை தர்ம விதிகளில் இருந்து திசை திருப்பப்பட்டது. அதிலிருந்து மீள வேண்டும் என்றால் வெள்ளையர்கள் ஆட்சி செய்த அளவிலான காலம் தேவைப்படும் என காந்தி தெரிவித்தார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்ட மத சார்பின்மைக்கும், வெளியே போதிக்கபட்ட மதசார்பின்மைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. சனாதன தர்மம் குறித்து பேசும்போது அதனை மதத்தோடு ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். உண்மையில் சனாதனமும் மதமும் வேறு வேறு. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றி உள்ளனர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது நாடு விழித்துக் கொண்டுள்ளது. நாட்டின் முதுகெலும்பு என விவேகானந்தர் மற்றும் காந்தி கூறிய ஆன்மிக வழியில் நாடு தற்போது சிந்திக்கவும் செயல்படவும் துவங்கியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடாக இந்திய இருக்க வேண்டும் என்ற பாதையில் செயல்பட்டு வருகிறது. அரசியலில் சரியாக இருக்க வேண்டும் எனக் கூறி ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம்.
அனைத்து கடவுகளுக்குமான இடம் என்பது இங்கு உள்ளது. ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அது தர்மமே இல்லை.
விவேகானந்தரின் கனவு பாரதத்தை உருவாக்க, தர்மத்தை வளர்க்க வேண்டும். அதற்கு ஆன்மிகம் மீதான வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பாதையில் இதனையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT