Published : 26 Jun 2022 02:30 PM
Last Updated : 26 Jun 2022 02:30 PM
புதுச்சேரி: பொது சொத்துகளை தனியாருக்கு தாரை வார்த்து தரவே ஆளுநர் தமிழிசையிடம் நில உரிமை அதிகாரம் தரப்பட்டுள்ளது. முதல்வர் தனது அதிகாரத்தை ஆளுநரிடம் விட்டு கொடுத்தன் மூலம் தமிழிசை சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருப்பது நிருபணமாகியுள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பாஜக ஆட்சியை கொண்டு வர அனைத்து முயற்சியையும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடுத்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளனர். வீரமிக்க சிவசேனா கட்சியினர் கட்சி மாறிகளை ஏற்கவில்லை.
பாஜக கட்சியே தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பது அல்ல. புதுச்சேரி, கர்நாடகா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, கோவா என பல மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை குறைவாக வைத்துக்கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தைச் செய்த பாஜக அதே முறையை மகாராஷ்டிராவில் செய்கிறது. சிவசேனா கட்சியானது, கட்சிமாறிகளை ஓடஓட விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளது. புதுச்சேரி மக்களுக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும்.
கட்சி மாறிகளை ஏற்கக்கூடாது. கட்சிமாறிகளால்தான் இந்திய அரசியல் தூய்மை இழந்துள்ளது. பாஜக முயற்சித்தாலும் மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியாது. கட்சி மாறி பாஜகவிலிருந்து பலரும் ஓடும்போதுதான் அந்த வலி மோடி, அமித்ஷாவுக்கு தெரியும். இதே சூழல் பாஜகவிலும் ஏற்படும். புதுச்சேரி அரசு செயல்படாத அரசாக உள்ளது. மக்களை பற்றி கவலைப்படவில்லை. வெளிநாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையிடம் கோடி கணக்கில் லஞ்சம் பேசப்படுகிறது.
முதல்வர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. சாலைகள் மோசமாக உள்ளது. தெருவிளக்கு எரிவதில்லை. நகரம் சுத்தமாக இல்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா சரளமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் புதுச்சேரி பின்நோக்கி சென்றுவிடும். ஏன் நிரந்தர ஆளுநரை மத்திய அரசு போடவில்லை. அதற்கு என்ன காரணம். டெல்லிக்கு சென்ற ஆளுநர் புதுச்சேரிக்காக என்ன திட்டத்தை கொண்டுவந்தார்.
ஜிப்மர் சரித்திரத்திலேயே பேராசிரியர்கள் தெருவில் இறங்கி போராடியதை இப்போதுதான். மத்தியில், மாநிலத்திலும் சீர்கெட்ட நிர்வாகம் நடக்கிறது. பெயர் பெற்ற ஜிப்மரை சீரழித்துவிட்டார்கள். ஜிப்மரை கவனிக்காத மத்திய அரசால் புதுச்சேரியில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும். கிரண்பேடி காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளனர். அப்போது ஆளுநருக்கு நில உரிமை அதிகாரத்தை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கூட அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மாநிலம்.
முதல்வரையும், அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. அந்த கூட்டத்தை முதல்வர் தான் நடத்தி இருக்க வேண்டும். நிலம் சம்பந்தமான பிரச்னைகளில் முடிவு எடுக்கின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு. புதுச்சேரியில் பொது சொத்துக்கள் நிறைய உள்ளன. எனக்கு கிடைத்த தகவல் படி பொது சொத்துகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காக ஆளுநருக்கு நில அதிகாரத்தை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலம் மற்றும் பொதுத்துறை சொத்துகளை கபளீகரம் செய்யும் வேலை நடந்து வருகிறது.
முதல்வர் தனது அதிகாரத்தை ஆளுநர் தமிழிசையிடம் விட்டு கொடுத்துவிட்டார். ஆளுநர் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருப்பதாக நான் கூறியது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. புதுவையில் ஒரு இன்ச் நிலத்தை கூட தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். இதனை எதிர்த்து போராடுவோம். புதுச்சேரி மக்களின் சொத்தை யாராவது கபளீகரம் செய்ய நினைத்தால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT