Published : 26 Jun 2022 09:15 AM
Last Updated : 26 Jun 2022 09:15 AM
பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டுதல் வழங்காததால், அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்குவதில் குழப்பம் நிலவுகிறது. பள்ளிக்கு வரும் பெற்றோர் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் கடந்த 2019-ல்மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்த, அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.
இதற்கிடையே, ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, அரசுப் பள்ளிகளில் இயங்கிய மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், ‘மழலையர் வகுப்புகள் அரசுப்பள்ளிகளிலேயே தொடர்ந்து இயங்கும். இதற்கு தகுதியான சிறப்புஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என்று பள்ளிக்கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியும், மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கை கோரி வருபவர்களை திருப்பி அனுப்புவது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
அமைச்சர் அறிவித்து பல நாட்கள் ஆகியும், மழலையர் வகுப்பு சேர்க்கை, ஆசிரியர் நியமனம் குறித்து கல்வித் துறை இன்னும் ஒரு ஆலோசனைக் கூட்டம்கூட நடத்தவில்லை. தனியார் பள்ளிகள் ஒருமாதம் முன்பே சேர்க்கையை முடித்துவிட்டன. அரசுப் பள்ளியில் நிலவும் தாமதத்தால் பெற்றோர் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலை உருவாகிஉள்ளதாக கல்வியாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் சிலர்கூறியபோது, ‘‘அரசுப் பள்ளியிலேயே மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டது நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக இருந்தது. அரசுப் பள்ளிகளில் சீருடை, புத்தகம், நோட்டு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுவதால் செலவு பல மடங்கு குறைகிறது.
ஆனால், இந்த ஆண்டில் மழலையர் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க பள்ளிக்கு சென்றால் ஆசிரியர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. ‘சேர்க்கைக்கு அனுமதி தரப்படவில்லை. 2 வாரங்கள் கழித்து வாருங்கள்’என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். நர்சரி பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாததால்தான் அரசுப்பள்ளிகளை நாடி வருகிறோம். எனவே, தமிழக அரசு தலையிட்டு, மழலையர் வகுப்பு சேர்க்கையை விரைந்து நடத்த அறிவுறுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘மழலையர் வகுப்பு சேர்க்கை தொடங்குவது குறித்து கல்வித் துறையிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை. அரசு அனுமதியின்றி குழந்தைகளை சேர்க்க முடியாது. மீறிசேர்க்கை நடத்தினால் குழந்தைகளுக்கு இலவச பாடப் புத்தகம்,சீருடை வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, சேர்க்கைக்காக வருவோரிடம் விவரங்களை வாங்கிவைத்துக்கொண்டு அனுப்புகிறோம். அரசு அனுமதி கிடைத்தபிறகு அவர்களை தொடர்பு கொண்டு சேர்க்கை வழங்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT