Published : 26 Jun 2022 11:00 AM
Last Updated : 26 Jun 2022 11:00 AM

குறு,சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு 49% உயர்வு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலையினாலும் கரோனா பெருந்தொற்றினாலும் நலிவுற்றிருந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டும் வகையில் 2022-23 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட, 49 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூ.911.50 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது" என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் வாழ்த்துச் செய்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது. பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்தியாவின் பல பெருந்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நம் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த தரத்திலும் மிகப்பெரும் எண்ணிக்கையிலும் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஒரு மிக முக்கிய காரணியாகும்.

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 27-ம் நாள் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடுகிறது.

தமிழகத்தில் உள்ள சுமார் 50 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பை அளிக்கின்றன. இந்திய அளவில், பாரம்பரியத் துறைகளில் தமிழகம் முன்னிலை வகிப்பதுடன், வளர்ந்து வரும் துறைகளான பாதுகாப்பு மற்றும் விண்வெளி, மின்சார வாகனம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளிலும் தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதனை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலையினாலும் கரோனா பெருந்தொற்றினாலும் நலிவுற்றிருந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டும் வகையில் 2022-23 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட, 49 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூ.911.50 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தினை நன்கு உணர்ந்த இவ்வரசு, அந்த தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக அனைத்து உதவிகளையும், ஆதரவினையும் நல்கி வருகின்றது.

மேலும் தமிழக தொழில் துறையின் தூண்களாக விளங்கும் இத்துறையின் வளர்ச்சியை மேன்மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படும் என்பதை இந்த இனிய நன்னாளில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதோடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x