Published : 25 Jun 2022 06:32 AM
Last Updated : 25 Jun 2022 06:32 AM

இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க பள்ளி - கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்: விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார் காவல் ஆணையர்

போதைப் பழக்கத்துக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான “போதைப் பொருட்களுக்கு எதிரான இயக்கம்” தொடங்குவது குறித்து அனைத்து காவல் துறை ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை: இளைய சமுதாயம் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும், இளைய சமுதாயம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.

இந்த விழிப்புணர்வு சுவரொட்டிகள், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் டி.எஸ்.அன்பு (வட சென்னை), ஜெ.லோகநாதன் (தலைமையிடம்), வட சென்னை இணை ஆணையர் ஆர்.வி.ரம்யா பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x