Last Updated : 24 Jun, 2022 11:22 PM

 

Published : 24 Jun 2022 11:22 PM
Last Updated : 24 Jun 2022 11:22 PM

கோவை | காவல்துறையின் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம்’ - நடப்பது எப்படி?

"ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்" திட்டம் குறித்து தெரிவிக்கும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் | படம்: ஜெ.மனோகரன்

கோவை: மாவட்ட காவல்துறையின் சார்பில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள், அதனை எதிர்கொண்டு காவல்துறையிடம் புகார் அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் 27-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருடப்பட்ட, மாயமான செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (24-ம் தேதி) நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மீட்கப்பட்ட 105 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது, "மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், பொதுமக்கள் தொலைத்த மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் என மொத்தம் 235 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம்.

குழந்தைகள் தான் வீட்டின், நாட்டின் எதிர்காலம். அவர்களின் பிரச்சினையை அவர்களே எதிர்கொள்ள, குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் வரும் 27-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட பகுதிகளிலுள்ள பள்ளிகளில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருடன் காவல் துறையினரால் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இக்கூட்டத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள், அதனை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும். குழந்தைகள் தங்களது பிரச்சினைகள் குறித்து தெரிவித்தால், அதனை காவல் துறையினரிடம் புகார் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படும்.

இதையடுத்து மாவட்ட பகுதியில் உள்ள 997 பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபடும். இதற்காக பள்ளி குழந்தைகளை 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பிரித்துள்ளோம். இதில், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு அளிக்கவுள்ளோம். தவறான தொடுதல் குறித்தும், அவ்வாறு யாராவது தவறான நோக்கில் தொட்டால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு

10 வயது மேற்பட்டவர்களுக்கு செல்போன்கள் மூலம் ஏற்படக்கூடிய சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தற்போது பள்ளி மாணவ-மாணவிகள் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளையும் விளையாடுகின்றனர். எனவே, அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து எடுத்து கூற இருக்கிறோம்.

எந்தெந்த பகுதிகளில் உள்ள பள்ளி குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்து, அங்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x