Published : 24 Jun 2022 10:05 PM
Last Updated : 24 Jun 2022 10:05 PM

லஞ்சம் பெறும் காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லஞ்சம் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரியார் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் பெட்டிக் கடை நடத்தி வந்தவரிடம் வாரந்தோறும் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரதாசுக்கு மூன்றாண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து குமாரதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திடம் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகமானது இல்லை எனக்கூறி, அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், “இந்த தண்டனையிலிருந்து லஞ்சம் பெறுவதை காவல் துறை உயரதிகாரிகள் தீவிரமாக கருதவில்லை என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி, லஞ்சம் பெறுவது குற்றம் என்றாலும், அவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது. குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” என்று அதிருப்தி தெரிவித்தார்.

”இந்த சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கச் செய்கிறது. ஊழலைத் தடுப்பதற்காக, அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து வலுப்படுத்த வேண்டும்.மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்ற அரசு ஊழியர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும் .

காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நடைபாதை வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கி கொண்டு ஆக்கிரமிக்க அனுமதிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வெறும் துறை ரீதியான நடவடிக்கையை மட்டும் எடுக்காமல், வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x