Published : 24 Jun 2022 05:45 PM
Last Updated : 24 Jun 2022 05:45 PM
சென்னை: "திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய மாநகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் வட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டபோதும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உறுதியளித்தப்படி ரிஷிவந்தியம் வட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பை மட்டும் இதுவரை வெளியிடாதது அப்பகுதி மக்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்துள்ளது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டிற்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
ஏறத்தாழ 60 கிராமங்களை உள்ளடக்கிய ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் வாழும் கிராமப்புற மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான அரசு சான்றிதழ்களைப் பெறவும், கோரிக்கை மனுக்களை அளிக்கவும் 50 கிமீ அப்பால் உள்ள சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைந்து திரிய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ரிசிவந்தியத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மாணவர்களும், முதியவர்களும், பெண்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய மாநகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் வட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டபோதும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உறுதியளித்தப்படி ரிஷிவந்தியம் வட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பை மட்டும் இதுவரை வெளியிடாதது அப்பகுதி மக்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்துள்ளது.
புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக ரிஷிவந்திய ஊராட்சி ஒன்றிய மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதும், அரசு இவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கிறது. ரிஷிவந்திய மக்களின் நியாயமான இக்கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 18 பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment