Published : 24 Jun 2022 03:08 PM
Last Updated : 24 Jun 2022 03:08 PM
சென்னை: "முதல்வரே ரொம்ப சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீர்கள், விரைவிலே உங்களுடைய அருமை மகன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது, உங்கள் கட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். அடுத்தது இன்பநிதிக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தோற்றவர்கள், விரக்தியின் விளிம்பில் இருப்பவர்கள் எதை வேண்டுமானலும் பேசுவார்கள். அங்கு யார் இருக்கிறார்கள், ஓபிஎஸ் ஒரு எம்எல்ஏ, மனோஜ் பாண்டியன் ஒரு எம்எல்ஏ, வைத்திலிங்கம் ஒரு எம்எல்ஏ. இந்த 3 பேரில் யார்யார் எந்த கட்சிக்கு போகப்போகின்றனர் என்று தெரியவில்லை. சில பேருக்கு தெரியும்.
இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும், ஒவ்வொரு காலக்கட்டத்தில் உள்கட்சி பிரச்சினை வருவதும் உண்டு, தீர்க்கப்படுவதும் உண்டு. தமிழகத்துக்கு புதிதாக வந்திருக்கிற முதல்வர், இந்த மண்டபத்தில் விமரிசையாக நடக்கிறது. இன்னொரு மண்டபத்தில், உங்களுக்கு ஏன் வயிறு எரியுது?
திமுக அப்படியே ஜனநாயக முறைப்படி நடக்கின்ற கட்சியா? முதலில் இந்தக் கேள்வியை கேட்கிற தகுதி, திமுகவுக்கும் இல்லை, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இல்லை. அதிமுக அடிப்படைத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், தொண்டர்களால் வழிநடத்தப்படுகிற இயக்கம். ஒரு சாதரண தொண்டர், கிளைக் கழக செயலாளரில் இருந்து, ஒன்றியப் பொறுப்புக்கு வந்து, மாவட்ட, மாநில பொறுப்புக்கு வந்து, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சராக நியமிக்கப்பட்டு, பிறகு எந்த பொறுப்பும் இல்லாமல், அனைத்து பொறுப்புகளும் நீக்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு, இன்று ஒன்றரை கோடி தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சிறப்பாக நான்கரை ஆண்டு காலம் முதல்வராக இருந்திருக்கிறார்.
இந்த ஜனநாயகம் திமுகவில் நடக்குமா? மன்னராட்சி குடும்பம் அது. திமுக என்பது வாரிசு அரசியல். அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் வராதா? ரொம்ப சந்தோஷப்படாதீர்கள். முதல்வரே, ரொம்ப சந்தோஷப்பட்டு கொள்ளாதீர்கள். காலம் விரைவிலேயே வருகிறது. நாங்களும் காத்துக்கொண்டிருக்கிறோம். நாங்களும் சொல்லுவோம். நாங்களும் செய்வோம். விரைவிலே உங்களுடைய அருமை மகன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது, உங்கள் கட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். அடுத்தது இன்பநிதிக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, என்ன நடக்கிறது என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம்" என்று அவர் கூறினார்.
அதிமுக நிலவரம் குறித்து அவர் கூறியது > காலாவதியானது ஒருங்கிணைப்பாளர்கள் பதவி; ஓபிஎஸ் பொருளாளர், இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளர்: சி.வி.சண்முகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...