Published : 24 Jun 2022 01:43 PM
Last Updated : 24 Jun 2022 01:43 PM

காலாவதியானது ஒருங்கிணைப்பாளர்கள் பதவி; ஓபிஎஸ் பொருளாளர், இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளர்: சி.வி.சண்முகம்

சென்னை: "நேற்றுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்டச் செயலாளருமான வைத்திலிங்கம் சில கருத்துகளை கூறியிருக்கிறார். இந்த பொதுக்குழுக் கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை.

இந்தப் பொதுக்குழுக் கூட்டம் பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படவில்லை. கூலியாட்களை வைத்தும், அடியாட்களைக் கொண்டும் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை முறைப்படி தேர்வு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தப் பொதுக்குழுவில் நடந்துமுடிந்த கட்சியின் அமைப்புத் தேர்தலை அங்கீகரிக்காததால், தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி செல்லாது. எனவே, இந்தப் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் செல்லாது என்று கூறியிருக்கிறார். மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் கூறியிருக்கிறார். அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தப் பொதுக்குழுவை கூட்டுகிற அதிகாரம், கட்சியின் விதி 19-ல் யாருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பொதுக்குழுவை பொதுச் செயலாளர், தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் இந்தப் பொதுக்குழுவைக் கூட்டலாம். ஆண்டுக்கொரு முறை கண்டிப்பாக கட்சியின் பொதுக்குழுக் கூட்டப்பட வேண்டும். மேலும், தேவைக்கேற்ப பொதுக்குழுவைக் கூட்டுகிற அதிகாரம், ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் உண்டு.

மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் 1, அதாவது 2565 பேரில் 5 ஆல் வகுத்தால் வரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்தால் பொதுக்குழுவைக் கூட்டலாம். அதிமுக விதி 19 பிரிவு 7-ல் பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அவசியம் கருதும்போது கூட்டப்படலாம். மேற்படி கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு கொடுக்கப்படவேண்டும்.

பொதுக்குழுக் கூட்டம் நடைபெற குறைந்தளவு மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு வருகை தந்தாலே போதும். பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டுக் கேட்டுக்கொண்டால், பொதுக்குழுவின் தனிக்கூட்டத்தை அறிவிப்புக் கிடைத்த 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும். இதில் எங்கேயுமே இவர்களின் அனுமதியைப் பெற்று கூட்ட வேண்டும் என்று சொல்லப்படவில்லை. எனவே வைத்திலிங்கம் கூறியிருக்கிற இந்த கருத்து முழுக்க முழுக்க தவறு.

கடந்த 23-ம் தேதிக்கு முன்பு வரை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த தற்போது இந்த கட்சியின் பொருளாளராக இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வமும், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த, தற்போது கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முறைப்படி கையெப்பமிட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் 2565 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் 2.6.2022 அன்று தேதியிட்ட கடிதத்தை அனைவருக்கும் முறையாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கி, 23.6.2022 அன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கையெழுத்திட்டு அழைப்பு விடுத்தது யாரு?

அப்போது வைத்திலிங்கம், ஓபிஎஸ் போட்ட கையெழுத்து இல்லை என்கிறாரா? போலி என்கிறாரா? அல்லது ஓபிஎஸ் தனக்கு தெரியாமல் அந்த கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறாரா? இது முறையற்ற கூட்டம் என்று சொன்னால், நீதிமன்றத்தில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று வாதிட்டார்களா இல்லையா?. எனவே கட்சி விதிகள், நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு முறையாக நடைபெற்றது. இதில் எந்தவிதமான சட்ட விதிமீறலும் இல்லை.

அவைத்தலைவரை இதுவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்வார். அவர் இருந்தவரை அவர் கூறியதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவர் சொல்வது எங்களுக்கு சட்டம். அதை நாங்கள் கேள்வி கேட்கமாட்டோம். அவரும் சட்டப்படி முறையாகத்தான் செயல்படுவார். ஆனால், வைத்திலிங்கத்திற்கு நன்றாக தெரியும், ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு சொல்கிறார். அவர், ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும்தான் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறுகிறார்.

ஆனால், கட்சியின் விதி 19-ல் பிரிவு 5- தலைமைக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள்கூடி, கட்சியின் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இதுவும் தவறு. நேற்று பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழ்மகன் உசேனை அவைத் தலைவராக நான் வழிமொழிகிறேன் என்று கூறினாரா? இல்லையா? என்பதை வைத்திலிங்கம் கூற வேண்டும்.

நீதிமன்றம் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்றுதான் உத்தரவிட்டுள்ளது. எனவே, தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் பொதுக்குழுவின் உரிமை. தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளதாக கூறியிருக்கிறார். வழக்குத் தொடருங்கள் நாங்கள் பார்க்கிறோம்.

உட்கட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கட்சியின் விதிகளில் எங்கேயும் கூறப்படவில்லை. விதிமுறைகள்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் .இந்த தேர்தல் குறித்து முறையாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. கட்சி விதி 43-ல் கட்சியின் சட்டதிட்ட விதிகளை இயற்றவும், மாற்றவும், நீக்கவும் பொதுக்குழு அங்கீகாரம் படைத்ததாகும்.

மேலும் 1.12.2021 அன்று கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சட்ட திருத்தம் நேற்றைய பொதுக்குழுவுக்கு கொண்டு வராததால், தானாகவே காலாவதியாகிவிட்டது. எனவே, அந்த பொறுப்பும் நேற்றோடு முடிந்துவிட்டது. நேற்றுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர். இதுதான் இன்றைய நிலை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x