Published : 24 Jun 2022 04:37 AM
Last Updated : 24 Jun 2022 04:37 AM

பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு, ஓபிஎஸ் மீது பாட்டில் வீச்சு... - 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன?

சென்னை: நீதிமன்ற உத்தரவால் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பாதியில் வெளியேறினர். அவர்கள் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் அண்மையில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பட்டியலுக்கு கட்சியின் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் எழுந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். இதையடுத்து, உடனடியாக ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீது இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, விடிய விடிய விசாரணை நடத்தியது. பின்னர், பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம். மற்றவை குறித்து முடிவெடுக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு தொடங்கியது. இதில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகாலையில் இருந்தே வரத் தொடங்கினர். அடையாள அட்டை, அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 10.25 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தார். அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால், மேடைக்கு செல்லாமல் தனி அறையில் அமர்ந்திருந்தார்.

பொதுக்குழுவுக்கு வந்த பழனிசாமிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனால், காலை 11.20 மணிக்குதான் அவர் மண்டபத்துக்கு வந்தார். 11.30 மணிக்கு அவர் மேடைக்கு வந்ததும், ஓபிஎஸ்ஸும் மேடைக்கு வந்தார். தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடுவில் அமர்ந்திருக்க அவருக்கு வலதுபுறம் பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகியோரும், இடதுபுறம் ஓபிஎஸ், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். இரு தரப்பினரும் கடைசி வரை பேசிக்கொள்ளவில்லை.

தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனை பொதுக்குழு கூட்டத்தை நடத்தி வைக்கும்படி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிந்து பேச, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அதை வழிமொழிந்தார். தொடர்ந்து, பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். பொன்னையன் தீர்மானத்தை வாசிக்க வந்தபோது, குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது” என்று ஆவேசமாக பேசினார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பி.வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது, “தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்துவிட்டனர். அவர்கள் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை, ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பதுதான். அடுத்து எப்போது பொதுக்குழு கூடுகிறதோ, அப்போது ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்துடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்” என்றார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செம்மலை, இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதில், கட்சியின் மூத்த முன்னோடிகள், பாடகி லதா மங்கேஷ்கர், ஜெயலலிதா வீட்டில் பணியாற்றிய ராஜம்மாள் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் தலைமையுரை ஆற்றினார். அவரிடம் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை சி.வி.சண்முகம் வழங்கினார். அப்போது சி.வி.சண்முகம் பேசியதாவது:

இரட்டை தலைமையால் கட்சிக்கு பின்னடைவுகள், சங்கடங்கள், நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் திமுக அரசையும், கட்சியையும் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் இரட்டைத் தலைமையால் கடுமையாக எதிர்த்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொண்டர்களிடையே மிகப்பெரிய சோர்வு ஏற்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவைப்போல வலிமையான, வீரியமான, தெளிவான ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின்கீழ் தொண்டாற்றுவது குறித்து விவாதித்து பதிவு செய்ய வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதுகுறித்து பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், “பொதுக்குழு உறுப்பினர்களால் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை ஏற்று, வரும் ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும்” என்று அறிவித்தார்.

அப்போது, மேடையில் இருந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் எழுந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றியுரை தெரிவித்த நேரத்தில், குறுக்கிட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், “சட்டத்துக்கு புறம்பான இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என தெரிவித்துவிட்டு அரங்கில் இருந்து வெளியேறிச் சென்றனர்.

அப்போது, ஓபிஎஸ்ஸை வெளியேறும்படி பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷமிட்டனர். வெளியே சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது தண்ணீர் பாட்டில், காகிதங்கள் வீசப்பட்டன. அதில் ஒரு பாட்டில் ஓபிஎஸ் மீது விழுந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி.வேலுமணி நன்றியுரை ஆற்ற, அத்துடன் பொதுக்குழு நிறைவடைந்தது.

பொதுக்குழுவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படாத நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை அடிப்படையில், ஒற்றைத் தலைமைக்காக மீண்டும் பொதுக்குழுவை கூட்ட பழனிசாமி தரப்பு முடிவெடுத்துள்ளது. இதனிடையே, இந்த நடவடிக்கை செல்லாது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் டெல்லி பயணம்

அதிமுக பொதுக்குழு முடிந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், வழக்கறிஞரும், எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் நேற்று இரவு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சை, பொதுக்குழுவில் நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு தீர்வுகாண தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதற்காக டெல்லி செல்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x