Published : 23 Jun 2022 01:29 PM
Last Updated : 23 Jun 2022 01:29 PM
சென்னை: புதுக்கோட்டை சமஸ்தான மறைந்த மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்த நாளையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் 100வது பிறந்த நாள் விழாவையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ஸ்ரீ பிரகதாம்மாள் தாஸ் எச்.எச்.ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் (கி.பி. 1639 தொடங்கி 1948 வரை) பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாறு நீண்டு நெடியது.
மாமன்னர் ரய தொண்டைமான் தொடங்கி தற்பொழுது நூற்றாண்டு விழாக் காணும் மன்னர் ராஜகோபால தொண்டைமான் வரையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை உள்ளடக்கிய மக்களுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் அளவிடற்கரியது.
மன்னராக இருந்தபோதிலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்ததோடு, நம் இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்றவுடன் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் வேண்டுகோளை ஏற்று தனது புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்ததோடு மட்டுமின்றி, சமஸ்தானத்தின் கஜானாவிலிருந்த 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்ட அத்தனையும் ஒப்படைத்த பெருமைக்குரியவர்.
மேலும், புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் 99 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அரண்மனை வளாகத்தினையும் அரசிடம் ஒப்படைத்தார். புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கும், மன்னருக்கும் பெருமை சேர்க்கின்ற வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருணாநிதி, அன்னாரின் திருவுருவச் சிலையினை 14.03.2000 அன்று திறந்து வைத்தார்கள் என்பதையும் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன்.
மாமன்னரின் நூற்றாண்டு விழா காணும் இந்நன்னாளில் மன்னரின் எளிமையும் அவர் மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளும் நாம் அனைவரும் நினைவுகூரத்தக்கது. அப்பெருமகனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் விழா குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது வாழ்த்துச் செய்தில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT