Published : 23 Jun 2022 01:17 PM
Last Updated : 23 Jun 2022 01:17 PM

பொதுக்குழு சலசலப்புகளுக்கு இடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உச்சகட்ட சலசலப்புகளுக்கு மத்தியில், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அவருக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசியது: "கடந்த 1972-ம் ஆண்டு, எம்ஜிஆரை திராவிட இயக்கத்திலிருந்து நீக்கியபோது, நான் ஓட்டிவந்த பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு, தலைவர் எம்ஜிஆருக்கு ஆதரவளிக்கின்ற வகையில் அரசு வேலையை விட்டுச் சென்றுவிட்டேன். பின்னர் அவருக்காக எம்ஜிஆர் மன்றங்களை தொடங்க ஆலோசனை செய்தேன்.

எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டுமென்று, ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆரை சந்தித்து அவரது காலை பிடித்து அழுதேன். பின்னர், சத்யா ஸ்டூடியோவில் இது தொடர்பான கூட்டம் நடநதது.

அப்போது, தனிக்கட்சித் தொடங்க யாரெல்லாம் விரும்புகிறீர்கள், அவ்வாறு விரும்புபவர்கள் எனக்கு கடிதம் தாருங்கள் என்று எம்ஜிஆர் கேட்டார். தனிக்கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்து 11 பேர் கையெழுத்திட்டனர், அதில் 4-வது கையெழுத்து, என்னுடையது. அந்தக் கையெழுத்துதான் அதிமுக உருவாக காரணமாக அமைந்தது.

இப்படி 68 ஆண்டு காலம் பொதுசேவையிலே என்னை ஈடுபடுத்திக் கொண்டு, இந்த இயக்கத்தின் எளிய தொண்டனாக கட்சியில் எந்தவொரு மனசங்கடகளுக்கும் இடம் கொடுக்காமல் இருந்ததை புரிந்துகொண்டதால், இந்தச் செயற்குழு, பொதுக்குழு என்னை கவுரவிக்கும் வகையில், ஓர் ஏழை தொண்டனும் இந்த சபையில் அவைத் தலைவராக வரலாம் என்ற வரலாற்றை உருவாக்கித் தந்துள்ளது.

இதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமைக் கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம்

அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்ட பின்பு, அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

அப்போது, மேடைக்கு வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "சட்டத்திற்கு புறம்பான இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்று ஆவேசமாக அறிவித்துவிட்டு வெளியேறினார்.

முன்னதாக, மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், “அனைத்து தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது” என்று கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் "இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டைத் தலைமையின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றைத் தலைமை ஏற்பட வேண்டும். எனவே, பொதுக் குழுவில் இரட்டைத் தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்து பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x