Published : 23 Jun 2022 04:56 AM
Last Updated : 23 Jun 2022 04:56 AM
சென்னை: மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு புதுக்கோட்டை நகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான், தனது பதவிக் காலத்தில் மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தார்.
அரசுக்கு நிலம் வழங்கியவர்
மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டையை முன்னேற்றும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க ராஜா ராஜகோபால தொண்டைமான், தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசுக்கு வழங்கினார்.
அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னரின் திருவுருவச் சிலையை கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருணாநிதி திறந்து வைத்தார். ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை’ என்று பெயர் சூட்டினார்.
மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்நாளில், அவரின் எளிமையையும் மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூரும் வகையில், தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT