Published : 23 Jun 2022 06:24 AM
Last Updated : 23 Jun 2022 06:24 AM

திருவண்ணாமலை | பள்ளியில் 2 வகுப்பறைகள் இடிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு இட நெருக்கடி: புதிய கட்டிடம் கட்டி கொடுக்க பெற்றோர் கோரிக்கை

இட நெருக்கடியால் தலைமை ஆசிரியர் அறையில் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறுகிறது. படங்கள்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: ஆவூர் அருகே கல்லணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடிக்கப்பட்ட 2 வகுப்பறைகளுக்கு மாற்றாக புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டி கொடுக்காததால், இட நெருக்கடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அருகே கல்லணை கிராமத்தில் (கீழ் கரிப்பூர்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 257 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் அனை வரும், விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குழந்தைகள்.

பள்ளியில் 8 வகுப்பறைகள் இருந்தன. இதில் 2 வகுப் பறைகளின் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கடந்தாண்டு இடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.

இதனால், 6 வகுப் பறைகளில் பாடம் கற்பிக்கப்படு கிறது. இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர் அறையிலும் வகுப்பு நடைபெறுகிறது. சில நேரங்களில் வகுப்பறைகளுக்கு வெளியிலும் பாடம் கற்பிக்கப்படுகிறது. இதனால், 2 வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நூலக கட்டிடம் தேவை

இது குறித்து கிராம மக்கள் மற்றும் பெற்றோர் கூறும்போது, “பழுதடைந்த 2 வகுப்பறைகள் இடித்து அகற்றப்பட்டு, ஓராண்டு கடந்தும் புதிய கட்டிடம் கட்ட வில்லை. இதனால், இட நெருக் கடியில் மாணவர்கள் உள்ளனர். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, 2 வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

மேலும், பள்ளியில் நூலகம் இல்லை. இதனால், தலைமை ஆசிரியரின் அலமாரியில் நூல்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. நூல்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், நூலகத்துக்கு தனி அறை கட்டி கொடுக்க வேண்டும். நூல்களை படிப்பதன் மூலமாக கிராமப்புற மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்படும்.

பள்ளியில் பயன்பாட்டில் உள்ள 6 வகுப்பறைகளில் 2 வகுப்பறைகளுக்கு தன்னார்வலர் சிவஜோதியின் முயற்சியால் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்துள்ள 4 வகுப் பறைகளின் தரைக்கும் டைல்ஸ் பதிக்க வேண்டும்.

அதேபோல், வகுப்பறைகளுக்கு பென்ச் இல்லாததால், தரையில் அமர்ந்து மாணவர்கள் படிக்கின்றனர். 2 வகுப்பறைகளுக்கு மட்டுமே பென்ச் உள்ளது. எனவே, அனைத்து வகுப்பறைகளுக்கும் பென்ச் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அடுத்த கல்லணை ஊராட்சி
ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2 வகுப்பறைகள் இடிக்கப்பட்ட இடம்
காலியாக உள்ளது.

ஸ்மார்ட் டிவிகள் அவசியம்

6, 7, 8-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெற 3 வகுப்பறைகளுக்கும் ஸ்மார்ட் டிவிக்கள் தேவைப்படுகின்றன. தலைமை ஆசிரியர் அறையில் உள்ள ஸ்மார்ட் டிவியை கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இணையதள சேவை இல்லாததால், ஆசிரியர்களின் முயற்சியால், ஸ்மார்ட் வகுப்புகள் நடை பெறுகின்றன.

பள்ளியில் உள்ள 3 கணினிகளும் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. காட்சிப் பொருளாக உள்ள கணினிகளை அகற்றி விட்டு, புதிய கணினிகளை வாங்கி கொடுக்க வேண்டும்.

விளையாட்டில் மாணவர்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. விளையாட்டு உபகரணங்களும் இல்லை. இதனால், மாணவர்களின் தனித் திறனை வெளிக்கொண்டு வர முடியவில்லை. விளையாட்டு கல்வியை ஊக்குவிக்க, உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

மேலும், மழைக் காலங்களில் வகுப்பறைகளின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கொட்டுகிறது. இதனால், மேற்கூரையை பலப்படுத்திட முன் வர வேண்டும். அதேபோல், பள்ளிக்கு சுற்றுச் சுவர் எழுப்பி, பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி, புதுப் பொலிவை ஏற்படுத்திட பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு தன்னார்வலர்கள் முன்வந்து உதவினால், விவசாய மற்றும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி தரம் மேம்பட உதவியாக இருக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x